கோலாலம்பூர்:
சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாங்கானில் (Seri Kembangan) அங்கீகரிக்கப்படாத போலி ஹலால் இலச்சினையைப் (Halal Logo) பயன்படுத்தி வணிகத்தில் ஈடுபட்டு வந்த தொழிற்சாலை ஒன்றை சிலாங்கூர் மாநில உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு (KPDN) நேற்றுக்காலை அதிரடியாகச் சோதனையிட்டது.
காலை 11.25 மணியளவில், புத்ராஜெயா குடிநுழைவுத்துறை துறையின் (JIM) உளவுத்துறை மற்றும் சிறப்பு நடவடிக்கை பிரிவுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த கூட்டு நடவடிக்கையில், போலி ஹலால் முத்திரை இடப்பட்ட RM215,700 மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் 31,140 எண்ணிக்கையிலான துணி துவைக்கும் திரவங்கள் (Detergent), 40,000 பிளாஸ்டிக் பேக்கேஜிங் பைகள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் அடங்கும் என்று சிலாங்கூர் மாநில KPDN இயக்குனர் முஹமட் ஹனிஃப் அஸாரி தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்கள் அளித்த இரகசியத் தகவலின் பேரில் இந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், முதற்கட்ட விசாரணையில் அந்தத் தொழிற்சாலை தனது தயாரிப்புகளை இணையம் (Online) வழியாக சந்தைப்படுத்தி வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
இச்சோதனையின் போது, விசாரணைக்கு உதவும் பொருட்டு அந்நிறுவனத்தின் இயக்குனர் ஒருவரும், ஐந்து வெளிநாட்டு ஊழியர்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, மேல் நடவடிக்கைக்காக குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து, 2011ஆம் ஆண்டு வர்த்தக விவரிப்புச் சட்டத்தின் கீழ் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.




















