எழுத்தாளர் சங்க தேர்தலில் போட்டியிட மாட்டேன் – இயக்குநர் பார்த்திபன் …

சென்னை, இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு பின், எழுத்தாளர் சங்கத் தலைவர் அல்லது செயலாளர் பதவிக்கு போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெறலாம் என சிலர் கூறினர் என்று இயக்குநர் பார்த்திபன் கூறியுள்ளார்.

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ், கடந்த ஜூன் 27-ந் தேதி அன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. இவரது இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெற்றது. மறைவிலிருந்து தகனம் வரை இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் பாக்யராஜ் குடும்பத்தினருடன் இருந்து கவனித்துக்கொண்டார். மேலும், நேர்காணல் ஒன்றில் பேசிய போது, “தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிரந்தர கவுரவ தலைவராக பாக்யராஜ் இருக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வைக்கப் போகிறேன்” என்றார்.

தற்போது, எழுத்தாளர் சங்க தேர்தல் குறித்து புதிய பதிவொன்றை பார்த்திபன் வெளியிட்டுள்ளார். அதில், “பாக்யராஜ் சாருக்கு எழுத்தாளர்கள் சங்க தேர்தல் சற்று மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அறிந்தேன். ஏற்கனவே அவர் நடுநிலையாக/சிறப்பாக செயல்பட்டிருந்ததால் தலைமை பதவிக்கு தகுதியானவராக இருப்பினும்,தேர்தலை சந்திக்கும் போது address தேடி வரும் stress-ஐ சமாளிக்க முடியாமல் சற்றே சிரமப் பட்டதாக கேள்விப்பட்டேன். “இது ஒன்றும் பொது தேர்தல் அல்ல, போட்டியின்றி கவுரவமாக தேர்ந்தெடுத்தால் நீங்கள் தலைமைத் தாங்குங்கள் இல்லாவிட்டால் அமைதியாக உங்கள் எழுத்தை கவனியுங்கள்” என நான் அவரிடம் கூறுவதுண்டு. அவர் மறைவிற்கு பின் என்னிடம் சிலர் அவருக்கு பதிலாக அத்தலைவர் பதவிக்கோ செயலாளர் பதவிக்கோ போட்டியிட்டால் அமோக வெற்றி பெறலாம். காரணம் தற்போது தங்கள் மீது அபார அபிப்பிராயம் அனைவருக்கும் உள்ளது என்று கூறினார்கள். நான் மென்மையாக அதை மறுத்தேன். என் ஒவ்வொரு சொட்டு உண்மையான கண்ணீருக்கும் உள்நோக்கமான களங்கம் கற்பிக்கப்படும்.என் உணர்வுகள் முழுக்க முழுக்க உன்னதமானது அதை அனுதாபமாக்கி விற்று வெற்று வெற்றி பெற எனக்கு விருப்பமில்லை என்பதை அழுத்தமாக சொல்லி விட்டேன்.வெற்றி பெறும் அணிக்கு என் முன் கூட்டிய வாழ்த்துக்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here