பேங்காக் மதுபானக் கூடத்தில் பயங்கர தீ விபத்து: சுற்றுலாப் பயணிகள் உட்பட 27 பேர் பரிதாப பலி; 63 பேர் காயம்!

பேங்காக்:

தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள பிரபல உணவகத்துடன் கூடிய மதுபானக் கூடம் (Pub & Restaurant) ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, சுற்றுலாப் பயணிகள் உட்பட 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அண்மை ஆண்டுகளில் தாய்லாந்தை உலுக்கிய மிக மோசமான தீச்சம்பவங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த விபத்தை, அந்நாட்டுப் பிரதமர் அனுட்டின் சார்ன்விராக்குன் மற்றும் அரசு அதிகாரிகள் திங்கட்கிழமை முறைப்படி உறுதிப்படுத்தியுள்ளனர்.

‘சோய் லாட் பிராவ் 1’ (Soi Lat Phrao 1) சாலைக்கு அருகே அமைந்துள்ள அந்த மதுபானக் கூடத்தில் தீ மூண்டதும், உள்ளே இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேற முயன்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக உணவகத்தின் முதன்மை வாயிற்கதவுக்கு அருகே திடீரென குண்டு வெடிப்பது போன்ற ஒரு வெடிப்புச் சம்பவம் (Explosion) நேரிட்டதால், மக்கள் வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

இந்தத் தீச்சம்பவத்தில் உயிரிழந்த 27 பேரில் 18 பேர் பெண்கள் ஆவர். தீயணைப்பாளர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவ இடத்தை நள்ளிரவு வாக்கில் பிரதமர் அனுட்டின் நேரில் சென்று பார்வையிட்டார்.

இவ்விபத்தில் மேலும் 63 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 22 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக (Critical) உள்ளதாகப் பேங்காக் நகரின் ஆளுநர் சாட்சார்ட் சிட்டிப்புன்ட் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here