சிரம்பான்:
நாளை (ஜூலை 18) நடைபெறவுள்ள நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் தினத்தை முன்னிட்டு, இதுவரை மொத்தம் 464 வேட்புமனுப் படிவங்கள் விற்பனையாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையத்தின் (EC) தலைவர் டத்தோஸ்ரீ ரம்லான் ஹாரூன் தெரிவித்துள்ளார்.
இன்று காலை சிரம்பான் மாநகர மன்றக் கட்டடத்தில் உள்ள பல தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் மையங்களின் முன்னேற்பாடுகளைப் பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களில் இதுவரை 70 பேர் மட்டுமே தங்களின் வைப்புத்தொகையைச் (Deposit) செலுத்தித் தங்களின் பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், இறுதி நேரப் பரபரப்பைத் தவிர்க்க வைப்புத்தொகையை இன்றே முன்கூட்டியே செலுத்துமாறு வேட்பாளர்களை வலியுறுத்தினார்.
கடந்த ஜோகூர் மாநிலத் தேர்தலைப் போலன்றி, இம்முறை நெகிரி செம்பிலானில் உள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தனித்தனி மையங்கள் அமைக்கப்படாமல், ஒருங்கிணைப்பை எளிதாக்கும் பொருட்டு 8 நாடாளுமன்றத் தொகுதிகளின் அடிப்படையில் 8 மையங்களாக மையப்படுத்தப்பட்டுள்ளன.
நாளை காலை நடைபெறும் வேட்புமனுத் தாக்கல் செயல்முறைகளைக் கண்காணிக்க மொத்தம் 761 தேர்தல் ஆணைய அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
நாளை எவ்விதத் தொய்வும் இன்றிப் பணிகள் நடப்பதை உறுதி செய்ய, இன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மையங்களிலும் முழுமையான ஒத்திகை (Rehearsal) நடத்தப்பட்டுள்ளது.
நாளை காலை 9 மணிக்குத் தொடங்கும் வேட்புமனுத் தாக்கல், சரியாக 10 மணிக்கு நிறைவடையும். அதன் பின்னர் தகுதியான வேட்பாளர்களின் பட்டியலைத் தேர்தல் அதிகாரிகள் அறிவிப்பர்.
அரசியல் கட்சியினரும் அவர்களின் ஆதரவாளர்களும் எந்தவொரு தூண்டல் அல்லது வன்முறைச் செயல்களிலும் (Provocation) ஈடுபடக் கூடாது என்றும், தேர்தல் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி அமைதியைக் காக்க வேண்டும் என்றும் ரம்லான் ஹாரூன் கேட்டுக்கொண்டார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் வாக்களிக்க தகுதியுடைய மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 889,490 பேர் (இதில் சாதாரண வாக்காளர்கள்: 867,151; ராணுவத்தினர் & இணைகள்: 16,884; போலீசார்: 5,455) உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு முன்கூட்டியே வாக்குப்பதிவு (Early Voting) ஜூலை 28 ஆம் தேதியும், பொது வாக்குப்பதிவு நாள் ஆகஸ்ட் 1 இல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.




















