கோலாலம்பூர்:
மலேசியக் குடிநுழைவுத் துறையின் ‘MyIMMs’ கணினி அமைப்பைச் சட்டவிரோதமாக ஊடுருவி, தற்காலிக வேலைவாய்ப்பு வருகை அனுமதி (PLKS) விண்ணப்பங்களுக்கு விதிமுறைகளை மீறி ஒப்புதல் அளித்த விவகாரத்தில், மேலும் 5 குடிநுழைவுத் துறை அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) அதிரடியாகக் கைது செய்துள்ளது.
30 முதல் 40 வயதுக்குட்பட்ட நான்கு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என 5 அதிகாரிகள், வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று (திங்கட்கிழமை) MACC தலைமையகத்திற்கு வந்திருந்தபோது ‘ஆப்ஸ் கிராக்’ சிறப்பு நடவடிக்கையின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைக்காக சந்தேக நபர்களிடமிருந்த 5 கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த வழக்கு தொடர்பில் இதுவரை 17 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் RM300,000 மதிப்பிலான 9 வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கப்பட்டுள்ளன.
விதிமுறைகளுக்குப் புறம்பாகக் கணினி அமைப்பை ஊடுருவி, தகுதியற்ற விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கியதாகத் தொடரப்பட்ட இந்த முக்கிய ஊழல் வழக்கில், ஏற்கனவே கடந்த ஜூலை 28-ஆம் தேதி 6 குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மற்றும் ஒரு காவல் துறை அதிகாரி உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது மேலும் 5 அதிகாரிகள் சிக்கியுள்ளதைத் தொடர்ந்து, இந்தச் சட்டவிரோத வலையமைப்பை முழுமையாகக் கண்டறிய MACC தீவிர விசாரணையைத் தொடர்ந்து வருகிறது.























