கோலாலம்பூர்:
தாபோங் ஹாஜி நிர்வாகம் தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் (RCI) அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, அம்னோ தலைவர்களான அப்துல் அஸிஸ் அப்துல் ரஹீம் மற்றும் அஸ்ராப் வஜ்டி டுசுக்கி ஆகியோர் முழுப் பொறுப்பேற்று வெளிப்படையான விளக்கமளிக்க வேண்டும் என பெர்சத்து கட்சி வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டில் முறையற்ற தணிக்கை முறைகள் மூலம் லாபம் காட்டப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், அப்போதைய நிர்வாகத்தில் பொறுப்பிலிருந்த தலைவர்கள் உரிய விளக்கத்தை நாட்டு மக்களுக்கு அளிக்க வேண்டும் என டாக்டர் ஆபிஃப் இன்று வெளியீட்டில் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை நிறுவனங்களின் மாண்பைக் காக்கவும், எந்தவிதத் தலையீடும் இன்றி நியாயமான விசாரணை நடைபெற வழிவகுக்கவும் சம்பந்தப்பட்ட தலைவர்கள் தங்களது பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாகப் பதவி விலக வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM) மற்றும் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் ஆகியவை இந்த விவகாரத்தில் எந்தவொரு பாரபட்சமுமின்றி முற்றிலும் சுதந்திரமான விசாரணையை உடனடியாக முடுக்கிவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.






















