அரசியல் அல்ல; பொறுப்பை நிறைவேற்றும் ஜோகூர் அரசு

(கோகி கருணாநிதி)

ஜோகூர் பாரு:

ஜோகூர் மாநில அரசு அரசியல் செய்வதற்காக அல்ல, மக்களின் நலனை முன்னிறுத்தி தனது பொறுப்பை நிறைவேற்றுவதற்காகவே சுகாதாரத் துறையை வலுப்படுத்தி வருவதாக மாநில சுகாதாரம், சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் லிங் தியான் சூன் தெரிவித்தார். டாக்டர் ரஃபிதா அப்துல்லா வெளியிட்ட கருத்துக்குப் பதிலளித்த அவர், மாநில அரசின் முழுமையான முயற்சிகளை அறியாமல் விமர்சனம் செய்யக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.

இதுவரை மாநில அரசு, மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களை மேம்படுத்துதல், லோகம் மருத்துவர்கள் நியமனம், தாய்-சேய் நலப் பிரிவுகளுக்கான மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக ரி.ம.6 கோடியே 50 லட்சம் ஒதுக்கியுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் நலனுக்காக ஓய்வறை வசதிகள், ஹரிராயா சிறப்பு உதவி மற்றும் பந்துவான் காசிஹ் ஜோகூர் திட்டம் உள்ளிட்ட உதவித் திட்டங்களுக்கும் பல மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மருத்துவப் பணியாளர் பற்றாக்குறை பிரச்சினையை மாநில அரசு தொடர்ந்து மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று வருவதாகவும், இதற்காகச் சுகாதார அமைச்சு, பொதுச் சேவைத் துறை, தொடர்புடைய அதிகாரிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

பாசீர் கூடாங் மருத்துவமனையில் 2,271 பணியிடங்களில் 1,192 பணியிடங்கள் இன்னும் காலியாக உள்ளதாகவும், சுல்தானா அமீனா மருத்துவமனையில் 613 மற்றும் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் 285 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படாவிட்டால், மருத்துவப் பணியாளர்களின் பணிச்சுமை மேலும் அதிகரித்து, அதன் பாதிப்பு பொதுமக்களின் மருத்துவச் சேவையிலும் பிரதிபலிக்கும் என்று எச்சரித்த அவர், ஜோகூர் மக்களின் நலனுக்காக இந்த விவகாரத்தை மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here