கோலாலம்பூர்:
மலேசியா-சிங்கப்பூர் இரண்டாவது பாலத்தில் சட்டவிரோத கார் பந்தயத்தை நடத்துவதற்காகச் சாலையின் ஒரு பகுதியை மறித்த வழக்கில், வாகனப் பிரபலம், ingluencer ஒருவர் உள்பட எட்டு உள்ளூர் நபர்கள் நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டம் பிரிவு 42(1)-இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காகக் கூலாய் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காவல்துறை விடுத்த கோரிக்கையை ஏற்று, மாஜிஸ்திரேட் ஆர். சாலினி இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
முன்னதாக, கைது செய்யப்பட்ட அனைவரும் நேற்று காவல்துறையினரால் அழைத்துவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
செனாய் உத்தாரா சுங்கச்சாவடி முதல் Johor Premium Outlet சந்திப்பு வரையிலான பாலப் பகுதியில், சட்டவிரோதப் பந்தயத்திற்காக இவர்கள் சாலையை மறித்ததாக நம்பப்படுவதாக ஜோகூர் மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ அப்துல் ரஹமான் அர்ஸாட் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளியில், பொதுமக்களை வழிவிடச் செய்துவிட்டுப் பந்தயத்தில் ஈடுபட்டது பதிவாகியிருந்ததை அடுத்து, கூலாய் மாவட்டக் காவல் தலைமையகத்தின் போக்குவரத்துப் புலனாய்வு மற்றும் அமலாக்கப் பிரிவினர் உடனடியாக இவர்களைக் கைது செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
























