தனது குழந்தைக்கு உதவி கேட்பது போல் நடித்து, மூத்த குடிமக்களிடம் கொள்ளையடித்து வந்த பெண் கைது

கோத்தா பாரு, டிசம்பர் 9 :

கடந்த சனிக்கிழமை அதிகாலை, முதியவரை ஏமாற்றிக் கொள்ளையடிக்க முயன்ற பெண்ணின் தந்திரமான முயற்சி தோல்வியடைந்ததுடன் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

27 வயதான சந்தேகநபர் ஓப்ஸ் சந்தாஸ் (Ops Cantas) மூலம் கம்போங் ஜெனெராக், பாச்சோக்கிலுள்ள ஒரு வீட்டில் 3.15 மணியளவில் கைது செய்யப்பட்டார்.

சமையற்காரராகப் பணிபுரியும் சந்தேகநபர், தனது மூன்று வயது மகனைப் பயன்படுத்தி அனுதாபத்தைப் பெறுவதற்காக, அவர் கூடுதலாக தனியாக வாழும் மூத்த குடிமக்களைக் குறிவைத்து, இந்த தந்திரமான கொள்ளையை செய்துவந்துள்ளார் என விசாரணையின் மூலம் அறியமுடிகிறது என்று கிளந்தான் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷஃபியன் மாமட் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் நகைகளை அபகரிப்பதற்கு முன்னர், சந்தேக நபர் முதலில் தனது மகனுக்கு பால் வாங்கித் தருவதற்காக நிதி உதவி கேட்டு முதியவரை அணுகியதாகக் கூறப்படுகிறது.

கோத்தா பாரு பகுதியில் 80 வயதுகளில் உள்ள பாதிக்கப்பட்ட முதியவர்கள் சம்பந்தப்பட்ட கொள்ளைச் சம்பவங்கள் குறித்த மூன்று போலீஸ் புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அனைத்திற்கும் குறித்த அந்தப் பெண்ணே மூளையாகச் செயல்படுவதாக நம்பப்படுகிறது.

பாதிக்கப்பட்ட அனைவரின் சாட்சியங்களின்படி, சம்பவம் நடந்தபோது, ​​மூத்த குடிமக்கள் அந்தந்த வீடுகளில் தனியாக இருந்ததாகவும், ஒரு பெண் தனது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் வந்து உதவி கேட்டதாகவும் கூறினர்.

“சந்தேக நபர், பாதிக்கப்பட்ட அனைவரிடமும் பணம் கேட்பது போல் நடித்துவிட்டு, பாதிக்கப்பட்டவர்கள் அணிந்திருந்த நகைகளைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிடுவார்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“Ops Cantas குற்றவியல் தகவலின் அடிப்படையில், போலீசார் சந்தேக நபரை கைது செய்ய முடிந்தது என்றும் அவரிடமிருந்து Yamaha Ego S மோட்டார் சைக்கிள், ஒரு சாவிக்கொத்து மற்றும் முகக்கவசம் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்,” என்று அவர் இன்று ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைக்காக சந்தேகநபர் நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாகவும், குற்றவியல் சட்டத்தின் 394 வது பிரிவின் கீழ் வழக்கு விசாரணை செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here