நாட்டின் 8 மாநிலங்களில் இன்றும் தொடர் மழை நீடிக்கும்; மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கோலாலம்பூர், டிசம்பர் 18 :

நாட்டின் எட்டு மாநிலங்களில் இன்றும் தொடர் மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMelaysia) இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

மலேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஜெனரல் முஹமட் ஹெல்மி அப்துல்லா கூறுகையில், பகாங்கில், அதாவது லிப்பிஸ், ஜெராண்டுட், மாரான் மற்றும் குவந்தான் ஆகிய இடங்களில் கடுமையான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேராக்கின் கோல கங்சார், மஞ்சோங், கிந்தா, மத்திய பேராக், கம்பார், பாகான் டத்தோ, ஹிலிர் பேராக், பாதாங் பாடாங் மற்றும் முஅல்லிம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கி தொடர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“பகாங்கின் கேமரன் ஹைலேண்ட், கிளந்தான், திரெங்கானு, ரவூப், பெந்தோங், தெமர்லோ மற்றும் பெரா, சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய இடங்களிலும் தொடர் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

பருவமழை (cold surge) மற்றும் வெப்பமண்டல காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தொடர்ந்து கனமழை பெய்ததாக அவர் கூறினார்.

இருப்பினும், கனமழை எச்சரிக்கை நிலைமையைப் பொறுத்து புதுப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தற்போது பெய்துவரும் வடகிழக்கு பருவமழை இன்றுடன் முடிவடையும் என்றும் வானிலை படிப்படியாக சீராகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று முன்தினம் பெய்த தொடர் கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் திணைக்களத்தின் (JPS) தேசிய வெள்ள முன்னறிவிப்பு மற்றும் வெள்ள எச்சரிக்கை மையம் (PRABN) இணைந்து வெளியிட்ட அறிக்கையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here