கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சங்கத்தின் 90ஆம் ஆண்டு விழா:

40 பேருக்கு சாதனையாளர்கள் விருதுகள்

கோலாலம்பூர்,

நாட்டில்  சரித்திரம் பெற்ற வர்த்தகச் சங்கங்களில் ஒன்றாக விளங்கும் கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சங்கத்தின் 90ஆம் ஆண்டு விழா 7.9.2019ஆம் தேதி பங்சார் நெக்ஸஸ் மாநாட்டு மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற வுள்ளது.  கெஅடிலான் கட்சியின் தேசியத் தலைவரும் நாட்டின் வருங்காலப் பிரதமர் என்று வர்ணிக்கப்படுபவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறப்பு வருகை புரிந்து இந்த விழாவுக்குத் தலைமை யேற்பார்.

நம்பிக்கைக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய அமைச்சர்களான எம். குலசேகரன், டாக்டர் சேவியர் ஜெயகுமார், பொன். வேதமூர்த்தி, கோபிந்த் சிங் டியோ, ஆர்.சிவராசா ஆகியோருடன் தொழில் முனைவர் அமைச்சர்  ரிஸுவான் முகமட் யூசோப், சிலாங்கூர் மந்திரிபெசார் அமிருடின் சாரியும் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.

கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சங்கம் தோற்றுவிக்கப்பட்டு 90ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. 90ஆம் ஆண்டை முன்னிட்டு இம்முறை மிகப்பெரிய அளவில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அதன் தலைவர் டத்தோ இராமநாதன் தெரிவித்தார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடக்கும் இந்த விழாவில் 24 தொழில்துறைகளில் சாதனை படைத்த 40 பேருக்கு சாதனையாளர்கள் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

3 பேருக்கு பிளாட்டினம் தன்னிகரற்ற சாதனையாளர் விருது, 5 பேருக்கு சிறந்த தொழில் முனைவர்கள் விருது, 40 பேருக்கு தங்கச் சாதனையாளர் விருதுகள் வழங்கப்படவிருப்பதாக டத்தோ இராமநாதன் குறிப்பிட்டார்.

மலேசியத் திருநாட்டில் 24 தொழில் – வர்த்தகத் துறைகளில் வெற்றிக்கொடி நாட்டிய 48 பேருக்கு இந்த விழாவில் சிறப்பு செய்யப்படுவது வரலாற்றுச் சாதனையாகும்.

அரசாங்க அதிகாரிகள், தனியார் துறை இயக்குநர்கள், அரசு சார்பற்ற இயக்கத் தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், வர்த்தகச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அவர் சொன்னார்.

நேற்று நடைபெற்ற சிறப்பு பத்திரிகையாளர் கூட்டத்தில் டத்தோ இராமநாதன் இதனைத் தெரிவித்தார். கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சங்கத்தின் உதவித் தலைவர் தமிழ்ச்செல்வம், செயலாளர் நிவாஸ் இராகவன், பொருளாளர் குமரகுரு, உச்சமன்ற உறுப்பினர்களான முத்து பாண்டி, கோபால், சுரோஜ், டோனி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here