தமிழ்மொழி கட்டாயத் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள்!

தமிழக அரசின் பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டத்தின்படி, பணியில் சேர்ந்த, இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ்மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பிற மொழிகளில் படித்த ஆசிரியர்கள் பலர் பணியில் சேர்ந்துள்ளனர். இவர்கள், பணியில் சேர்ந்த, இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ் மொழிக்கான கட்டாயத் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையுடன் பணி வழங்கப்பட்டது. ஆனால், நுாற்றுக்கணக்கான ஆசிரியர்கள், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாமல், தமிழ்த் தேர்விலிருந்து விலக்கு கேட்டு, பள்ளிக் கல்வித் துறைக்கு மனுக்கள் அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளிக் கல்விப் பணியாளர் பிரிவு இணை இயக்குநர், நாகராஜ முருகன் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ‘சட்டத்தை பின்பற்றி பணியில் சேர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ்த் தேர்வை முடிக்காதவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை அறிக்கையாகச் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசின் பணி நிபந்தனை விதிகளின்படி, தமிழ்மொழி படிக்காத ஆசிரியர்கள் மீது, சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’ என அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்டக் கல்வி அதிகாரிகள் வழியே, அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here