தர்மசங்கடமான ஃபிரண்ட்ஸ் பற்றி பேச பலரும் தயங்குவார்கள். அதிலும் நடிகைகள் சுத்தமாக வாயே திறக்க மாட்டார்கள். அதிலிருந்து மாறுப்பட்டவராக மாறியிருக்கிறார் ரெஜினா. கேடி பில்லா கில்லாடி ரங்கா, மிஸ்டர் சந்திரமவுலி, சிலுக்குவார்பட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்தவர் அடுத்து நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி படங்களின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில் இந்தியில் ‘ஏக் லட்கி கோ டெகஹா டோ ஐசா லகா’ படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது.
இதில் லெஸ்பியன் (பெண்ணுக்கு பெண் காதல்) கதாபாத்திரம் ஏற்று நடித்தார். நடிகைகள் பலரும் ஏற்க தயங்கும் கதாபாத்திரத்தில் நடித்ததுபற்றி ரெஜினா கூறும்போது,’இப்படித்தான் நடிக்க வேண்டும் என்ற மரபுகளை நான் உடைத்திருக்கிறேன் என்று எண்ணுகிறேன். லெஸ்பியன் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நான் நடித்த கதாபாத்திரத்தை பார்த்து வரவேற்று மெசேஜ் அனுப்பினர்.
உண்மையை சொல்லப்போனால் லெஸ்பியன் சமுதாயத்தில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் இருக்கின்றனர். என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று அவர்களிடம் நான் சொல்லவில்லை. படத்தை திரையில் பார்த்தபிறகே அவர்களுக்கு நான் லெஸ்பியன் வேடத்தில் நடித்திருந்தது தெரியவந்தது. படம் பார்த்த பின் அவர்கள் கண்களில் கண்ணீரை பார்த்தேன். என்னை நினைத்து அவர்கள் பெருமைப்பட்டுக் கொண்டதுடன் அவர்களின் கதாபாத்திரத்தை நான் ஏற்று நடித்ததற்காக சந்தோஷம் அடைந்தனர்’ என்றார்.