சின்சினாட்டி:
அமெரிக்காவில் நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார்.
மூன்றாவது சுற்றில் தகுதிநிலை வீராங்கனை ரெபக்கா பீட்டர்சனுடன் (ஸ்வீடன்) மோதிய பிளிஸ்கோவா 7-5, 6-4 என்ற நேர் செட்களில் போராடி வென்றார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 42 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு 3வது சுற்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸுடன் (16வது ரேங்க்) மோதிய நட்சத்திர வீராங்கனை சிமோனா ஹாலெப் (ரோமானியா) 1-6, 6-3, 5-7 என்ற செட் கணக்கில் 2 மணி, 2 நிமிடம் போராடி தோற்றார்.
முன்னணி வீராங்கனைகள் நவோமி ஒசாகா (ஜப்பான்), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), ஆஷ்லி பார்தி (ஆஸி.), மரியா சக்கரி (கிரீஸ்), ஸ்வெட்லனா கஸ்னட்சோவா (ரஷ்யா), சோபியா கெனின் (அமெரிக்கா) ஆகியோரும் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளனர். பெடரர் வெளியேற்றம்:
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் களமிறங்கிய சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் 3-6, 4-6 என்ற நேர் செட்களில் ஆந்த்ரே ருப்லெவிடம் (70வது ரேங்க், ரஷ்யா) தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), லூகாஸ் பவுல்லி (பிரான்ஸ்), டானில் மெட்வதேவ் (ரஷ்யா), பாடிஸ்டா அகுத் (ஸ்பெயினோ), ரிச்சர்ட் காஸ்கே (பிரான்ஸ்), நிஷியோகா (ஜப்பான்) ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.