புதுடெல்லி:
நாடு முழுவதும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அக்டோபர் 2ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. பிளாஸ்டிக் மாசுபாடு இன்றைக்கு உலகம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் மாபெரும் பிரச்சினை ஆகும். தெருவோரங்கள், கழிவுநீர் சாக்கடைகள், நீர்நிலைகள், கடல்கள் என எங்கும் வியாபித்திருக்கும் பிளாஸ்டிக் சுற்றுச்சூழலின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் ஏற்படும் மனித முன்னேற்றம் மற்றும் மக்கள் தொகைப் பெருக்கம் ஆகியவை பிளாஸ்டிக் மாசுபாடு அதிகரிக்க முக்கிய காரணிகளாகும். பிளாஸ்டிக் மாசுபாடு மிகநுண்ணிய அளவிலிருந்து பெரிய அளவு வரை நிகழ்கிறது.
இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை வரும் 2022ம் ஆண்டுக்குள் முழுவதுமாக ஒழிக்க இந்தியா முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திரமோடி தனது சுதந்திர தின உரையில், மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை கொண்டாடும் நேரத்தில், ஒருமுறை உபயோகப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில், ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக்கை முழுவதுமாக ஒழிக்க ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து பிராந்திய அலுவலகங்களுக்கும் ரயில்வே வாரியம் அனுப்பியுள்ள சுற்றிக்கையில், நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் மறுசுழற்சிக்கு பயன்படாத வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அக்டோபர் 2ம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது. அனைத்து ரயில் நிலையங்களையும் தூய்மையாக பாதுகாவும், சுற்றுச்சூழல் சீர்கேட்டை தடுக்கவும், 50 மைக்ரான்களுக்கு குறைவான, மறுசுழற்சிக்கு உதவாத பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள் உள்ளிட்டவற்றை, ரயில் நிலைய வளாகத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. மேலும், அனைத்து ரயில் மற்றும் ரயில் நிலையங்களிலும் ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் முழுவதுமாக அகற்றப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். முக்கிய ரயில் நிலைங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை நசுக்கும் இயந்திரங்கள் நிறுவப்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.