‘வந்தேறிகளா ‘? மனம் கனக்கிறது.

வந்தேறிகள் என்ற அடை மொழியில் இந்தியர்களையும் சீனர்களையும் அடையாளப்படுத்திப் பேசும்போது என் மனம் கனத்துப் போய் விடுகிறது.

இவ்வாறு சொல்பவர் ஒரு சதாரணமான ஆள் கிடையாது. நாட்டின் இரும்புப் பெண்மணி என்று விமர்சிக்கப்பட்டவர். நியாயங்களுக்கு ஆதர வாகவும் அநீதிகளுக்கு எதிராகவும் இன்றளவும் உரக்கக் குரல் கொடுத்து வரும் ஜனநாயகவாதி. தென் கிழக்கு ஆசியாவின் எழுச்சிமிக்க, பரவலாக மதிக்கப்பட்ட பெண் வேங்கை.

உண்மையைத் தைரியமாகப் பேசுவதில் அஞ்சா நெஞ்சர் . சவால்களை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் ஆற்றல் மிக்கவர். நாடாளுமன்ற மக்களவையிலும் அமைச்சரவையிலும் சிம்மக் குரலில் கர்ஜித்த பெண் சிங்கம். கண்ணியம், மனித நேயம் மிக்கவர்.

அவர்தான் அம்னோ முன்னாள் தேசிய மகளிர் தலைவி, முன்னாள் அமைச்சர்… டான்ஸ்ரீ ரஃபிடா அஸிஸ். 1987இல் இருந்து 2008 வரை 21 ஆண்டுகள் அனைத்துலக வாணிப, தொழில்துறை அமைச்சராக வெகு நீண்ட காலம் சேவையாற்றியவர்.

அவரது ஒரு மனம் திறந்த அறிக்கை என் மனத்தைத் தொட்டது. அதனை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

மலேசியா எனும் அமைதிப் பூங்காவில் மலாய்த்துவம், இந்தியத்துவம், சீனத்துவம்… என்பது இன்னமும் தொடரத்தான் வேண்டுமா? அதற்கான அவசியம்தான் என்ன? நாம் மலேசியர்களாக வாழவே முடியாதா?

எல்லாரது வேர்களும் வேறு நாடுகளில் இருந்து படர்ந்ததுதான் என்ற உண்மை தெரிந்திருந்தும் இன்னமும் இந்த வந்தேறிகள் அடைமொழி தேவைதானா? அவசியம்தானா?

எனது அம்மாவின் தாத்தா சுமத்ராவைச் சேர்ந்தவர். ராவா அரச பரம்பரையைப் பின்னணியாகக் கொண்டவர். எங்கள் குடும்ப வரலாறு தைப்பிங் மியூஸியத்தில் உள்ளது.

தானா மெலாயுவுக்கு வந்தபோது அவரது எல்லாச் சொத்துகளையும் விட் டுக் கொடுத்து விட்டு வந்தார். என் தாய் – தந்தை தரப்பில் எல்லாரும் சு மத்ராவில் இருந்து வந்தவர்கள்.

இதனால்தான் இந்தியர்களையும் சீனர்களையும் வந்தேறிகள் என்று அழைக்கும்போது என் மனம் கனத்து விடுகிறது. இந்த வழியில் பார்த்தால் நானும் வந்தேறிதானே!

மலாய் வம்சவளியின் மலேசியராக இருப்பதில் நான் எல்லை இல்லா பெருமைப்படுகிறேன். நம்மில் பலரது முன்னோர்கள் இந்தியாவில் இருந்தும் சீனாவில் இருந்தும் வந்திருக்கலாம்.

ஆனால், நான் எங்கிருந்து வந்தேன் என்பது பற்றி நான் சற்றும் கவலைப்படவில்லை. அதற்குக் காரணம் நான் ஒரு மலேசியன். இப்படிப்பட்ட உணர்வோடுதான் வாழ்கின்றனர் – வாழ்ந்தும் வருகின்றனர்.

சில அரசியல்வாதிகள் இதில் முரண்படுகின்றனர். முதலில் நான் மலாய்க்காரன். அப்புறம்தான் மற்றவை என்று வாதிடுபவர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

இந்நாடு இனியும் தானா மெலாயு கிடையாது. மலேசியா என்ற அடையாளம் மட்டுமே நிலைத்திருக்கிறது.

இனம் – நிறம் ஆடையைக் கழற்றிப் போட்டு விட்டு அனைத்து மக்களும் மலேசியர் என்ற ஆடையைத் தரித்துக் கொள்ள வேண்டும்.

அனைவரும் மலேசியர் என்ற உணர்வு அரசங்க இலாகாக்களில் இருந்து தொடங்க வேண்டும். இனம், மதம், தரம் பிரித்துப் பார்க்கும் போக்கு அறவே கூடாது.

அரங்சங்கப் பணியாளர்கள் ஆள் பார்த்து, ஆடை பார்த்து சேவை செய்யக்கூடாது. அனைத்து மக்களுக்கும்
சேவையாற்ற வேண்டும். சொந்த சமய நம்பிக்கைகளை மற்றவர்கள் மீது திணிக்கக்கூடாது.

நல்லது – கெட்டது, சரி – பிழை, சொர்க்கம் – நரகம் என்று தரம் பிரித்து செய்யப்படுவதற்குப் பெயர் மக்கள் சேவை அல்ல. அது ஒரு தனிமனிதனின் அழுக்கு நிறைந்த வியாக்கியானம் – குரோதம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ரொம்பவும் சுயநலமாக மாறி விட்டால் அதன் விளைவுகள் படுமோசமாக இருக்கும். மக்கள் சேவைகளில்
சுய சிந்தனை, விளக்கம், வியாக்கியானம் அறவே கூடாது.

மலேசியா – பல இனங்கள், பல கலாசாரங்கள், பல சமயங்கள் சூழ்ந்த நாடு. அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களது சொந்த முடிவுகளை மற்றவர்கள் மீது திணிக்கக்கூடாது.

இந்த இனக் கலவையை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். தேவையில்லாதவற்றில் மூக்கை நுழைத்து பின்னர் மூக்குடைபடுவதும் நல்ல மனிதர்களுக்கு அழகல்ல.

தனிநபரின் ஆடை என்பது நிச்சயமாக அரங்சங்கத்தின் கொள்கையாக இருக்க முடியாது. ஆனால் குறுகிய புத்தியைக் கொண்ட அதிகாரிகளின் திருவிளையாடல்களாகத்தான் இருக்க வேண்டும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

அரசியலில் அசிங்கங்களைக் கட்டவிழ்த்து விடுவதற்கு யாருக்கும் லைசென்ஸ் கொடுக்கப்படவில்லை. பல இனங்களைப் பிளவுபடுத்துவ தற்கும் தனிநபர் தாக்குதல் நடத்துவதற்கும் யாருக்கும் அனுமதியும் சுதந்திரமும் தரப்படவில்லை.

ஆனால், சில தனிநபர்களின் அக்கப்போரால் எல்லாமே பாழ்பட்டுப் போகின்றன. அவர்களுக்குப் பதவி மட்டும்தான் முக்கியம். மலேசியா முக்கியமல்ல. இனங்கள் பிளவுபட்டு நாடு சின்னாபின்னமானாலும் அவர்களுக்குக் கவலை இல்லை.

ஆச்சரியம் என்னவென்றால், இவர்கள் போன்றோரும் சுதந்திரமாக நடமாடுவதுதான்!

ஒவ்வொரு பிரஜையும் தன்னை முதலில் ஒரு மலேசியனாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டிற்கான விசுவாசத்தில் துளி அளவும் கறைபடிந்து விடக்கூடாது.

மலேசியர்கள் என்று முத்திரைக் குத்திக் கொள்வதால் யாரும் அவரவர் இன அடையாளத்தை இழக்கப் போவதில்லை.

மலாய்க்காரர், இந்தியர், சீனர், கடாஸான், ஈபான்… யாராக இருந்தாலும் நம் நாட்டின் பெருமைமிக்க பிரஜைகளாக மலேசியர் என்ற அடையாளத்தை அணிகலனாக அணிந்து கொள்வோம் என்று டான்ஸ்ரீ ரஃபிடா அஸிஸ் அறைகூவல் விடுத்துள்ளார்.

மனத்துக்கு சரியெனப் பட்டதைப் பட்டென செய்து முடிக்கும் இந்தப் பெண் சிங்கத்தின் ஒவ்வொரு வார்த்தையும் கல்வெட்டுகளில் பதிக்கப்பட வேண்டியவை. நாற்றமெடுத்த அரசியல்வாதிகளின் கன்னங்களில் விழும் பளார்… பளார்…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here