நாட்டிற்காகத் தங்களின் இன்னுயிரைத் தந்தவர்கள் இந்தியர்கள் – இந்துக்கள் என்பதை நாட்டின் 62ஆவது
சுதந்திர தினத்தையொட்டி நினைவில் கொண்டுவருவது அவர்களுக்கு நாம் செலுத்தும் வீர வணக்கமாக இருக்கக்கூடும்.
பல நூறு இந்தியர்கள் – இந்துக்கள் நாட்டிற்காக ரத்தம் சிந்தி, உயிர் துறந்திருந்தாலும் இன்று நாம் இருவரை மட்டும்தான் பார்க்கப் போகிறோம். மற்றவர்களின் விவரங்களைத் திரட்டி வருகிறோம். கிடைத்ததும் ஒவ்வொருவராக நாம் அறிமுகம் செய்து வீர வணக்கம் செலுத்துவோம்.
நம்முடைய விசுவாசம் மற்றும் தேசப்பற்று பற்றி கேள்வி எழுப்புபவர்களின் கன்னங்களில் பளார்… பளார் என்று விழட்டும்.
மலேசியர்களின் வரிப்பணத்தில் பிஆர் எனப்படும் நிரந்தரக் குடியிருப்பு அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டு ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்போல் வாழ்ந்து கொண்டிருக்கும் பல இன மக்களைப் பிளவுபடுத்திப் பார்க்கத் துடிப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்.
உளவுபேதா கார்ப்பரல் ஆர். சகாதேவன் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். அவரின் மரணம் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மிக மிகக் கொடூரமாக இருந்தது. பெரும் சித்திரவதைக்குப் பின்னர்
சகாதேவனின் உயிர் பறிக்கப்பட்டது.
அல்மவுனா பயங்கரவாதக் கும்பலின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவர்களின் முகாமை ஊடுருவி அழிப்பதற்காக சவுக், புக்கிட் ஜெனாலிக் காட்டுப் பகுதிக்கு சகா தேவன் அனுப்பப்பட்டார்.
2000, ஜூலை 2ஆம் நாள் மலேசியப் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு கறுப்புநாள். அன்றைய தினம் மிகப் பெரிய ராணுவ ஆயுதங்கள் கடத்தப்பட்ட நாள் ஆகும்.
மலேசிய அரசங்கத்தைக் கவிழ்ப்பதற்காக முகம்மட் அமீன் முகம்மட் ரஸாலி தலைமையில் 29 பேர் கொண்ட அல்மவுனா கும்பல் ஆயுதம் ஏந்தியது.
இக்கும்பல் 100 ராணுவத் துப்பாக்கிகள், ஆயுதங்கள், ஆயிரக்கணக்கான சுற்றுத் தோட்டாக்களை இரண்டு ராணுவ முகாம்களில் இருந்து கொள்ளையடித்தனர்.
இவர்களில் 27 தீவிரவாதிகள் புக்கிட் ஜெனாலிக் காட்டுக்குள் தப்பியோடி பதுங்கினர். கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதக் குவியல்கள் அல்மவுனா கும்பல் உறுப்பினர்களுக்குக் கொடுக்கப்பட்டு போர் – மறைவுத் தாக்குதல் பயிற்சி நடத்தப்பட்டது.
போலீசார் அப்பகுதியைச் சுற்றி வளைத்தனர். அல்மவுனா தீவிரவாதிகள் முகாமை ஊடுருவு வதற்குப் பாதுகாப்புப் படையினர் சிறப்புப் பணியில் அமர்த்தப்பட்டனர்.
இதில் போலீஸ் தரப்பில் சார்ஜண்ட் முகமட் ஷா அமாட், உளவுபேதா கார்ப்பரல் சகாதேவன், சிவிலியன் ஜபார் பூத்தே, ராணுவத்தைச் சேர்ந்த மெத்தியூஸ் மேடான் ஆகியோர் அல்மவுனா பயங்கரவாதக் கும்பலால் பிணைபிடிக்கப் பட்டனர்.
இவர்களில் சகாதேவன், மெத்தியூஸ் மேடான் ஆகிய இருவரும் மரங்களில் கட்டி வைக்கப்பட்டு சில தினங்கள் தொடர்ச்சியாகக் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.
தாம் நேசித்த நாட்டிற்காக சகாதேவன் இன்னுயிர் நீத்தார். கூடவே சரவாக்கைச் சேர்ந்த குதிரைப் படை வீரர் மெத்தியூஸ் மேடானும் பரிதாபமாக உயிரிழந்தார்.
அடுத்து கேப்டன் மோகனங்ந்திரன் த/பெ வேலாயுதம். இவர் நெகிரி செம்பிலான், சிரம் பானைச் சேர்ந்தவர். உலுகிந்தா பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் கம்யூனிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1971ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி மலேசிய ராணுவப்படை வீரர் கேப்டன் மோகன சந்திரன் தலைமையில் 23 பேர் உலுகிந்தா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் கம்யூனிஸ்டுகள் நடமாட்டத் தைக்கண்காணிப்பதற்குக் களமிறக்கப்பட்டனர்.
காட்டின் உள்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கம்யூனிஸ்டு பயங்கரவாதிகளின் மிகப் பெரிய முகாமுக்கு அருகில் 3 கம்யூனிஸ்டுகளைக் கண்டார் கேப்டன் மோகனசந்திரன்.
அவர்களை நெருங்கும் வேளையில் மலை உச்சியில் இருந்து வந்த கம்யூனிஸ்டு பயங்கரவாதியின் தோட்டாவுக்கு கேப்டன் மோகனசந்திரன் பலியானார்.
கம்யூனிஸ்டு பயங்கரவாதியின் குறிதப்பாத தோட்டா, கேப்டன் மோகன சந்திரனின் தலையில் ஊடுருவி போர்க்களத்திலேயே உயிர் துறந்தார்.
அந்த அடர்ந்த காட்டில் கம்யூனிஸ்டு பயங்கரவாதிகளுடன் கேப்டன் மோகனசந்திரன் தைரியத்துடனும்
துணிச்சலுடனும் போராடி இறுதியில் நாட்டிற்காகத் தன் இன்னுயிர் நீத்தார்.
அன்னாரின் வீரச் செயலுக்கு உயரிய அங்கீகாரம் அளிக்கும் வகையில் 1972 ஜூன் 7ஆம் தேதி அரசங்கம் அவருக்கு பிங்காட் ஸ்ரீ பாஹ்லவான் காகா பெர்க்காசா எனும் வீர விருதை வழங்கி கௌரவித்தது.
இப்படி இந்த இருவர் மட்டும் அல்ல. நாட்டின் பாதுகாப்பைக் காக்கும் கடமையில் தங்கள் இன்னுயிர் நீத்தவர்கள் மலேசிய மண்ணில் விதைக்கப்பட்டிருக்கின்றனர்.
தலைமறைவு வாழ்க்கை வாழ்பவர்களும் இனவாதத்தால் இனங்களை வெட்டிப் பிளக்கும் சர்ச்சகை்குரிய சமயப் போதகரும் இந்தப் பேருண்மை தெரியாமல் உளறிக் கொண்டிருப்பதை தெய்வம் மட்டும் அல்ல இயற்கை கூட மன்னிக்காது.
இந்த மண்ணுக்காக வாழ்ந்து வீழ்ந்து மண் ணோடு மண்ணாகிப் போவோமே தவிர, துரோகம் செய்யாத ஓர் இனம் தமிழினம்.