கோலாலம்பூர்
மலேசியாவினால் வெளியிடப்பட்டுள்ள நாட்டு மக்களின் வறிய நிலை உண்மை நிலையைப் பிரதிபலிக்கவில்லை என ஐநாவின் சிறப்பு பிரதிநிதி பேராசிரியர் பிலிப் ஆல்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
ஆய்வுகளின்படி மலேசியாவின் வறுமை நிலை 16லிருந்து 20 விழுக்காடு இருக்க வேண்டும். ஆனால், அது 0.4 விழுக்காடு மட்டுமே என குறிப்பிடப்பட்டுள்ளது ஏற்கத் தகுந்ததல்ல என பிலிப் குறிப்பிட்டிருந்தார்.
மேம்பாடு அடைந்து வரும் நாட்டுக்கு அது மிக, மிக குறைந்த அளவு என்றும் தங்களின் ஆய்வின்படி குறைந்தது 9 விழுக்காட்டு மக்கள் மாதம் ஒன்றுக்கு ரிம. 2,000 க்கும் குறைவான சம்பளத்தையே பெறுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த துன் மகாதீர், வறுமையைக் கணக்கிடுவதில் பிழை இருக்குமானால் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதனிடையே, பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சார் அஸ்மின் அலி, அரசினால் வெளியிடப்பட்ட நாட்டின் வறிய நிலையைத் தற்காத்துப் பேசியுள்ளார்.
அனைத்துலக அங்கீகரிக்கப்பட்ட வரம்பின்படி குடும்ப மாத வருமானம் ரிம. 980க்கும் குறைவாக இருந்தால், அது வறிய குடும்பம் என கருதப்படும். இந்தச் சம்பள வரம்பானது சுகாதாரமாகமும் சிக்கல் இல்லாமலும் குடும்பத்தை இயல்பாக நடத்தத் தேவைப்படும் அம்சங்களை மனதில் வைத்தே கணக்கிடப்பட்டுள்ளதாக அஸ்மின் குறிப்பிட்டார்.
ஐநாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில அம்சங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவையாகும். தேசிய நிலையில் வறுமை நிலையானது நாளொன்றுக்கு ரிம. 8 ( 2 டாலர்) ஆகும். ஆனால், ஐநாவின் கணக்கின்படி அது 1.25 டாலராக குறிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று சபாவில் ரிம. 1180மும் சரவாக் மாநிலத்தில் ரிம. 1,020க்கும் குறைவாக இருந்தால் அது வறிய நிலை என கணக்கிடப்பட்டுள்ளதாக அஸ்மின் தெரிவித்தார்.