கோலாலம்பூர்:
டாமன்சாரா பெர்டானாவில் நேற்று இரண்டு கத்திகளுடன் ரகளையில் ஈடுபட்ட உள்ளூர் ஆடவர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு சுமார் 7 மணியளவில் போலீசாருக்குப் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்தவுடன் டாமன்சாரா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்குள்ள கடைத்தொகுதி ஒன்றின் படிக்கட்டில், கையில் இரண்டு கத்திகளுடன் இருந்த அந்த ஆடவரைப் போலீசார் அடையாளம் கண்டனர்.
போலீசார் அந்த நபரைச் சூழ்ந்து கொண்டு கத்திகளை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர். எவ்வித அசம்பாவிதமும் இன்றி அவர் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காகத் தாமன்சாரா போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பொது இடத்தில் அபாயகரமான ஆயுதங்களை வைத்திருந்ததற்காக, அரிக்கும் மற்றும் வெடிக்கும் பொருட்கள் மற்றும் ஆக்கபூர்வமான ஆயுதச் சட்டம் 1958, பிரிவு 6(1)-ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சந்தேக நபர் மே 7-ம் தேதி வரை மூன்று நாட்களுக்குப் போலீஸ் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் போலீஸ் ஹாட்லைன் எண்ணான 03-2052 9999 என்ற எண்ணிற்கு அழைக்கலாம் அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்தை அணுகலாம் என மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் ஷம்சுதீன் மாமட் தெரிவித்துள்ளார்.




















