சுல்தானா அமீனா மருத்துவமனையின் தரம் உயர்த்தப்படும்

ஜோகூர்பாரு –

சுல்தானா அமீனா மருத்துவமனையின் தரத்தை உயர்த்தும் பணிகளும் சீரமைப்புப் பணிகளும் அடுத்த ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்தானா பாசீர் பெலாங்கியில் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸுல்கிப்ளி அகமதுவை சந்தித்த பின் மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் நேற்று இதனைத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் ஜோகூர் பட்டத்து இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிமும் உடன் இருந்தார். எழுபது ஆண்டுகளுக்கு மேல் பழைமையான மருத்துவமனையின் பிரதான கட்டடத்தின் மின் இணைப்புக் கம்பிகளைச் சீரமைக்கும் பணி உள்ளிட்ட தரத்தை உயர்த்தும் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளன என்று சுல்தான் குறிப்பிட்டார்.

கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சுல்தானா அமீனா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் தீ விபத்து நிகழ்ந்தது. அந்தத் தீவிர சிகிச்சை பிரிவும் சீரமைப்பு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

சுல்தானா அமீனா மருத்துவமனையில் நெரிசல் அதிகரித்திருப்பதாலும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாலும் ஜோகூர்பாருவில் இன்னொரு மருத்துவமனையைக் கட்ட வேண்டும் எனவும் சுல்தான் பரிந்துரை செய்தார்.

ஜோகூர் மக்களுக்கு மிகச்சிறந்த மருத்துவச் சேவை கிடைக்க வேண்டும் என்பது எனது விருப்பம் என்றார் சுல்தான். துங்கு லக்சமணா ஜோகூர் புற்றுநோய் மையம் சிகிச்சை ஆய்வு புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு ஆகியவற்றில் முழு கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் இந்தச் சந்திப்பில் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தை வழிநடத்தும் ஆசிய அமெரிக்கன் மெடிக்கல் குரூப் பிரதிநிதி சேவைத் தரத்தை உயர்த்துவதற்கு இன்னும் அதிகமான புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் தேவைப்படுவதாகக் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here