புத்ராஜெயா –
சிறுதொழில் முனைவர்கள் மத்தியில் ஊழல் தொடர்பான விழிப்புணர்வை விதைக்கும் நோக்கத்தில் பிரதான ஊழல் தடுப்பு பிரச்சாரப் பேரணியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) துணைத் தலைமை ஆணையர் டத்தோ சம்சுன் பஹாரின் பின் ஜமில் (தடுப்புப் பிரிவு) அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
அனைத்துலக ஊழல் தடுப்பு தினத்தையொட்டி புத்ராஜெயாவில் பிரிசின்ட் 8இல் அமைந்துள்ள மார்க்கெட்டில் சனிக்கிழமை காலை அதன் தொடக்க நிகழ்ச்சி இரண்டாவது முறையாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துடன் பல்வேறு சமூகநல அமைப்புகள் உட்பட இரு தனியார் நிறுவனங்கள் இணைந்து மாபெரும் விழிப்புணர்வு பேரணியாகத் தொடங்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.
நாட்டின் விஷக் கொல்லியாகப் பரவி வரும் ஊழலை அடியோடு வேரறுக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டத்தோ சம்சுன் வலியுறுத்தினார்.
சிறுதொழில் முனைவர்கள் இடையிலான ஊழல் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் சுமார் 1,500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், சமூகநல ஆர்வலர்கள் இதில் பங்கேற்று ஊழல் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“எதிர்காலத்தில் ஊழல் இல்லாத தொழில் துறையை நாட்டு மக்களுக்கு வழங்குவதற்கு இதுபோன்ற விழிப்புணர்வு பேரணிகள் அவசியமானது”
என அவர் கருத்துரைத்தார்.
சிறு தொழில் வியாபாரிகள், ஊழல் விவகாரத்தில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று அவர் நினைவுறுத்தினார்.
மேலும் அரசாங்கம், அரசாங்கத் துறைசார்ந்த தரப்பினரும் அரசுசாரா அமைப்புகளும் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கு பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து தங்களது பேரணிக்கு ஆதரவாக இருந்து வருவதாக டத்தோ சம்சுன் கூறினார். அதன் வாயிலாக ஊழல் இல்லாத சமூகமாக உருமாற்றம் அடைய முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சிறுதொழில் வியாபாரிகள் மத்தியில் வேண்டாம் ஊழல் எனும் பிரச்சாரக் கையேடு களை அவர் விநியோகம் செய்தார்.