பொதுமக்கள் பணத்தில் நகைகள் வாங்கியதில்லை

கோலாலம்பூர் –

எந்தக் காலகட்டத்திலும் பொதுமக்களின் பணத்தையோ அரசாங்கத்தின் பணத்தையோ பயன்படுத்தி நான் நகைகளை வாங்கியது கிடையாது என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.

1எம்டிபி நிதி நிறுவனத்தின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்திற்குச் சொந்தமான பணத்தைப் பதுக்கியதாக நஜிப் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. பிரதமராகப் பதவி வகித்த காலத்தில் நம்பிக்கை மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம் ஆகியவற்றைப் புரிந்ததாகவும் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நேற்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் 61ஆவது நாளாக விசாரணை நடைபெற்றது. தமது தற்காப்பு வாதத்தில் நஜிப் கூறியதாவது: 2014ஆம் ஆண்டு இத்தாலியில் உள்ள சாடினியா நகரில் டி கிறிஸோகோனோ நகைக்கடையில் விலையுயர்ந்த ஆபரணங்களை வாங்குவதற்காக 32 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளியை நான் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

மத்திய கிழக்கிலுள்ள கட்டார் நாட்டின் பிரதமராக ஷேக் அமாட் இருந்தார். அவரின் மனைவிக்கு அந்த நகைகளை வாங்கிக் கொடுத்தேன். மலேசியாவுக்கும் கட்டாருக்கும் இடையிலான அரசதந்திர உறவுகள் மேலும் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அந்த நகைகளை வழங்கினேன்.

மேலும் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பேங்காக்கில் உள்ள ஷங்ரிலா ஹோட்டலில் தங்குவதற்காக 12 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளியைச் செலவிட்டதாகவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பணம் எல்லாம் அரசாங்கத்திற்குச் சொந்தமான பணமோ அல்லது பொதுமக்களின் பணமோ இல்லை. என் வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட பணம்.

இவ்வாறு நஜிப் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here