கல்வி அமைச்சின் ஓராண்டு சாதனைகள்

கல்வி அதிவேகமாக மாறிவருகிறது. தொழில்புரட்சி 4.0-ஐ விரட்டிப் பிடிக்கும் அவசியத்திலும் கட்டாயத்திலும் இருக்கிறோம். எதிர்காலச் சவால்களைச் சமாளிப்பதற்குரிய அம்சங்களையும் கல்வித் துறைகளையும் நம் பிள்ளைகளுக்குக் கற்றுத் தரவேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது என்று கல்வியமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக் வெள்ளிக்கிழமை இங்கு தெரிவித்தார்.

அதே சமயத்தில் ஒழுக்க நெறிமிக்க மலேசிய இனத்தை உருவாக்கும் தார்மீகப் பொறுப்பு கல்வி அமைச்சுக்கு உள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஒழுக்கநெறி மிக்க கல்வி முறையால் மட்டுமே ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை செலுத்தும் பாரம்பரியம் மிக்க சமுதாயத்தை உருவாக்க முடியும். மகிழ்ச்சி, பரிவு, மரியாதை நிறைந்த மலேசிய சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.

எதிர்காலக் கல்வி என்பது வெறும் நவீன உலகமயம் மட்டும் அல்ல. மாறாக மனிதாபிமான உயர்வுகளுக்கு முக்கியத்துவம் தரவல்லதாகவும் இருப்பது அவசியம் என்று டாக்டர் மஸ்லீ மாலிக் குறிப்பிட்டார்.

இங்கு கேஎல்சிசி-இல் கல்வி அமைச்சின் 2019 அடைவு நிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை காலை வெளியிட்டார்.
சாதனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

உடற்பேறு குறைந்தவர்கள்

2018இல் 83,598 ஆக இருந்த உடற்பேறு குறைந்த மாணவர்கள் எண்ணிக்கை 2019இல் 88,419 ஆக உயர்வு கண்டது. அதிகரிப்பு 4,821 பேர்.
உடற்பேறு குறைந்தவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிபோய் விடக்கூடாது என்பதில் கல்வி அமைச்சு அதீத அக்கறையுடன் செயல்பட்டு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

2018இல் 9,674 வகுப்பறைகள் உடற்பேறு மாணவர்களுக்காக இருந்தது. 2019இல் அந்த எண்ணிக்கை 10,200 ஆக அதிகரித்தது. மேலும் 75 பள்ளிகளில் வகுப்பறைகள் அதிகரிக்கப்பட உள்ளன.

பி40 பிரிவு மாணவர்கள்

பி40 பிரிவைச் சேர்ந்த 52.8 விழுக்காட்டு மாணவர்கள் முழு ஆசிரமப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
51,191 மாணவர்கள் சிறப்புச் சலுகைகள் வழி உயர்கல்வி மையங்கள், தொழில் பயிற்சி களில் இடம்பெற்றுள்ளனர்.
62.06 விழுக்காட்டுப் பிள்ளைகள் மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ளனர்.
31,614 மாணவர்களுக்கு 6 கோடியே 81 லட்சம் வெள்ளி கல்வி உபகாரச் சம்பளம் வழங் கப்பட்டிருக்கிறது.

மாணவர்கள்

அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்ற அடிப்படையில் 1996 கல்விச் சட்டம் திருத்தம் செய்யப்பட்டு ஒரு பிள்ளை ஆரம்பக்கல்வி தொடங்கி இடைநிலைக் கல்வி வரை கட்டாயம் படிப்பதற்கு வகைசெய்யப்படும்.
இப்போதைக்கு ஆரம்பக் கல்வி அளவில் மட்டுமே கட்டாயக் கல்வி அமலில் இருக்கிறது.

சுழியம் நிராகரிப்புக் கொள்கையின் கீழ் ஆவணங்கள் இல்லாத 2,636 பிள்ளைகள் பள்ளியில் வெற்றிகரமாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எல்லா மொழிப் பள்ளிகளையும் சேர்ந்த 1, 2, 3ஆம் ஆண்டு மாணவர்களுக்குப் பரீட்சை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. படிப்புக்குப் பாதியிலேயே முற்றுப்புள்ளி வைத்த 4,369 மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குத் திரும்பியுள்ளனர்.

ஆசிரியர்கள்

ஆசிரியர்களுக்கான பாதுகாப்பு புதிய நிரந்தர நடைமுறையின் கீழ் பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
கையால் நிறைவு செய்யப்படும் மாணவர் பதிவேடு ரத்துசெய்யப்பட்டுள்ளது. மன உளைச்சலுக்கு ஆளான 15,565 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்களின் சுமைகள் 50 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளன. லினுஸ் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. சுகாதாரப் பதிவேடு, பள்ளிச் சிற்றுண்டிச்சாலை பொறுப்புகள் துணைத் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
ஆசிரியர் நிபுணத்துவத்தை உச்சநிலைக்குக் கொண்டு செல்வதற்கு மலேசிய ஆசிரியர்கள் ஆவணம் மேம்படுத்தப்படும்.
நாட்டின் ஏற்றமும் தாழ்வும் ஆசிரியர்களின் கைகளில் இருக்கிறது என்ற பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் நம்பிக்கையை டாக்டர் மஸ்லீ மேற்கோள்காட்டினார்.

14,000 ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி

ஆங்கில மொழி ஆசிரியர்கள் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 14 ஆயிரம் ஆசிரியர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மஸ்லீ மாலிக் கூறினார்.
இவர்களுள் முதல்கட்டமாக 76 விழுக்காட்டு ஆசிரியர்கள் அவர்களது ஆங்கில மொழி ஆளுமையில் திறன் பெற்றிருக்கின்றனர்.

மலேசிய ஆரம்ப மற்றும் இடைநிலைப்பள்ளிகளில் ஆங்கிலமொழி போதனையில் நிபுணத்துவத்தையும் திறனையும் மேம்படுத்துவதற்கு 2012ஆம் ஆண்டில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால், இதில் கல்வி அமைச்சின் முயற்சிகள் மட்டும் போதாது. கல்வித்துறை மேம்பாட்டிற்கு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் அவசியம் என்பதை டாக்டர் மஸ்லீ மாலிக் சுட்டிக்காட்டினார்.
கல்வி என்பது அனைவருக்குமானது. இதில் அனைவரும் பங்குகொள்ள வேண்டும். கல்வியமைச்சு பள்ளிகள், ஆசிரியர்கள் மட்டும் இதன் வெற்றியை உறுதி செய்துவிட முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

கல்வியாளர்களின் பாராட்டு

கல்வி அமைச்சின் சாதனை அறிக்கை மிகச்சிறந்த செயல் அறிக்கையாக இருக்கிறது என்று கல்வியாளர்கள் பாராட்டினர். ஆசிரியர் தொழில்துறையில் செய்யப்பட்டிருக்கும் மேம்பாடுகள் மிகவும் வரவேற்கத்தக்கவை என்று தேசிய ஆசிரியர் தொழிற்சங்கத் (என்யூடிபி) தலைமைச் செயலாளர் ஹெரி டான் வரவேற்றார்.

கல்வியமைச்சை உண்மையிலேயே ஒரு நிபுணத்துவ அமைச்சாக மாற்றியிருக்கும் கல்வியமைச்சரின் தூரநோக்குச் சிந்தனையைப் பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டார். கல்வியமைச்சின் இந்தச் சாதனை ஒரு முன்னுதாரணமான மற்றும் மிகச்சிறந்த ஒன்று என்று கல்வியாளர் டத்தோ என். சிவசுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

அமைச்சின் அதிகாரிகளின் கடுமையான உழைப்பு இந்தச் சாதனைகளுக்கு அடித்தளமாக விளங்குகிறது. முன்பு ஆசிரியர்கள் இடமாற்றம் கோரி செய்யும் விண்ணப்பங்கள் இழுத்தடிக்கப்பட்டு பல்வேறு மன உளைச்சல்களுக்கு ஆளாகினர். அது ஓர் இமாலயப் பிரச்சினையாகவே அன்று விளங்கியது. ஆனால் இன்று அதிகாரிகள் மிகவும் உதவியாகவும் ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட்டு விரைந்து முடிவுகள் எடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு மன நிம்மதியைத் தருகின்றனர் என்று அவர் சொன்னார்.

ஆசிரியர்களைப் பாதிக்கக்கூடிய உண்மையான பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண்பதில் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டிருக்கிறார். மக்களின் தேவைகளுக்கு ஏற்ப கல்வி முறையில் கூடுதலான மேம்பாடுகள் அவசியமாகின்றன.

இருப்பினும் இதுநாள் வரையில் இல்லாத அளவுக்கு கல்வி அமைச்சின் செயல் நடவடிக்கைகள் அபாரமாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய ஓர் அமைச்சராக டாக்டர் மஸ்லீ விளங்குகிறார். விரல் நுனியில் பிரச்சினைகளைத் தெரிந்து வைத்திருக்கிறார். அவரின் உத்தரவுகள் மிகத் தெளிவாக இருக்கின்றன. நட வடிக்கைகள் விரைந்து எடுக்கப்படுகின்றன.
டாக்டர் மஸ்லீயின் இந்த அயராத உழைப்புக்கும் முயற்சிகளுக்கும் தம்முடைய வாழ்த்தும் பாராட்டும் என்று டத்தோ சிவசுப்பிர மணியம் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here