இசைஞானி இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது!

ஜனவரி மாதம் 15-ம் தேதி காலை 9 மணிக்கு சபரிமலை சந்நிதானத்தில் நடக்கும் விழாவில் இசைஞானி இளையராஜாவிற்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை கோயில் நடை இரவு சார்த்தப்படும்போது ஹரிவராசனம் பாடல் ஒலிப்பது வழக்கம். அந்த ஹரிவராசனம் பாடலின் பெயரில் 2012-ம் ஆண்டு முதல் ‘ஹரிவராசனம் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. கேரள அரசு சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது. ஹரிவராசனம் விருது இசை உலக ஜாம்பவான்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். அப்படி விருது வழங்குபவர்களுக்கு சபரிமலையில் இசை கச்சேரி நடத்துவதற்கு அனுமதி வழங்குகிறார்கள்.

சபரிமலையில் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி தொடங்கும் மண்டல மகரவிளக்கு பூஜைகள் தை மாதம் ஒன்றாம் தேதியுடன் நிறைவுபெறும். மகரவிளக்கு தினத்தில் ஹரிவராசனம் விருது வழங்குவது வழக்கம். இந்த விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை, பாராட்டுப் பத்திரம் மற்றும் கேடயம் ஆகியவை வழங்கப்படும்.

இதற்கு முன்பு கே.ஜே.யேசுதாஸ், ஜயன், பி.ஜெயச்சந்திரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியன், கங்கை அமரன், கே.எஸ்.சித்ரா ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுக்கான விருது பி.சுசீலாவிற்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு, இசைஞானி இளையராஜாவிற்கு விருது வழங்கப்படுகிறது.

இதுகுறித்து கேரள அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ‘இந்த ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது இசைஞானி இளையராஜாவிற்கு வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தைக்காடு அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்துள்ளார். ஜனவரி மாதம் 15-ம் தேதி காலை 9 மணிக்கு சபரிமலை சந்நிதானத்தில் நடக்கும் விழாவில் இசைஞானி இளையராஜாவிற்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here