தம்பதிகள் பயணித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் விழுந்தது; மனைவி காயத்துடன் மீட்பு, கணவரை தேடும் பணி தொடர்கிறது

பெசூட், பிப்ரவரி 16 :

இங்குள்ள கம்போங் தெம்பிலா அருகே, தம்பதிகள் பயணித்த நான்கு சக்கர வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்ததில், மனைவி காயங்களுடன் மீட்கப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் பயணித்த நான்கு சக்கர வாகனம்  இன்று மாலை 6.25 மணியளவில் வெற்றிகரமாக ஆற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்டது. ஆனால் அந்தப் பெண்ணின் கணவரை தேடும் பணி இன்னும் தொடர்கிறது.

பெசூட் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (BBP) தலைவர் முஹமட் ஜூசோ கூறுகையில், தோயோத்தா ஹிலக்ஸ் வகை நான்கு சக்கர வாகன ஓட்டுநரான ஷுக்ரி வஹாப், 52, இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றார்.

முன்னதாக, தம்பதிகள் பயணம் செய்த நான்கு சக்கர வாகனம், மாலை 5.15 மணியளவில் சுமார் நான்கு மீட்டர் ஆழத்தில் ஆற்றின் அடிப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.”விபத்து நடந்த இடமான தெம்பிலா பாலத்திலிருந்து, சுமார் 10 மீட்டர் தூரத்தில் அந்த நான்கு சக்கர வாகனம் கண்டுபிடிக்கப்பட்டு, கிரேன் மூலம் வெளியே கொண்டு வரப்பட்டது.

“தாவாங், பச்சோக்கில் இருந்து வந்த, பாதிக்கப்பட்ட தம்பதியினரில் கணவர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை, மேலும் தேடுதல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கை தொடரும்” என்று அவர் கூறினார்.

காலை 6 மணியளவில் நடந்த சம்பவத்தில், கோல திரெங்கானுவுக்கு தனது மனைவி அசிசா முகமது யூசோப் (51) உடன் சுக்ரி பயணித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது.

ஆற்றங்கரையோரம் மரத்தில் சிக்கிக்கொண்ட மனைவி அஜீசா பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

இரவு 7 மணிக்கு ஒத்திவைக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கை, நாளை காலை 8 மணிக்கு மீண்டும் தொடங்கப்படும், என்றும் மேற்பரப்பு தேடலை உள்ளடக்கிய பகுதி நாளை மேலும் விரிவாக்கப்படும் என்றும் கூறினார்.

“இதுவரை, 20 மீட்டர் சுற்றளவில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன, பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க ஐந்து படகுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here