தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் அமிதாப் பச்சன்

புதுடில்லி –

இந்திய திரையுலகில் வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது. தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்டு மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டு இருந்தது.

கடந்த 23ஆம் தேதியன்று, புதுடில்லியில் 66ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. துணை அதிபர் வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கினார்.
கடுமையான காய்ச்சல் காரணமாக அமிதாப் பச்சனால் அன்றைய தினம் பங்கேற்க இயலவில்லை.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், அமிதாப் பச்சனுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த், தாதா சாகேப் பால்கே விருதினை வழங்கினார்.

இந்த விழாவில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கௌரவித்த மத்திய அரசுக்கு அமிதாப் பச்சன் நன்றி தெரிவித்தார்.

இந்திய திரையுலகில் வழங்கப்படும் மிகப் பெரும் விருது, தாதா சாகேப் பால்கே விருது ஆகும். இது, ஒரு தங்கத் தாமரை பதக்கம், ஒரு சால்வை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கம் ஆகியவை அடங்கியதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here