ஈரானைத் தாக்க மாட்டோம்!

டிரம்பின் அறிவிப்பினால் பதற்றம் தணிந்தது

வாஷிங்டன் –

ஈரானுடன் ராணுவ மோதலில் ஈடுபடப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அவ்விரு நாடுகளுக்கிடையே நிலவி வந்த உச்சகட்டப் பதற்றம் தணிந்துள்ளது.

ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படையினர் மீது புதன்கிழமையன்று ஈரான் பல எறிபடைகளைப் பாய்ச்சியது. இந்நிலையில், ஈரானுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா தாக்குதல் நடத்தும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த பதற்றமான சூழ்நிலையில், வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ஈரான் தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கியிருப்பதுபோல் தோன்றுகிறது என்றார்.

போர் பதற்றத்தைத் தணிக்கத் தானும் விரும்புவதாக ஈரான் கோடிக்காட்டியுள்ளது. நிலைமையை மேலும் மோசமாக்குவதற்கோ அல்லது போரில் ஈடுபடுவதற்கோ தாங்கள் விரும்பவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையிடம் (ஐ.நா.) ஈரான் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா. தலைமைச் செயலாளர் ஆண்டானியோ கட்டாரெஸ் மகிழ்ச்சி தெரிவித்தார். வளைகுடாவில் போர் பதற்றம் தணிந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இது வரவேற்கக்கூடியதாகும். இன்னொரு போரை உலகத்தால் தாங்கிக் கொள்ள முடியாது என்று அவர் சொன்னார்.

அமெரிக்கா மிகுந்த ராணுவ வலிமை கொண்டதாகும். வலுவான ஆயுதங்களும் அதனிடம் உள்ளன. ஆனால், அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயமல்ல. அமெரிக்காவின் ராணுவ மற்றும் பொருளாதார ரீதியிலான வலிமை மற்ற நாடுகளுக்கு பலத்த எச்சரிக்கையை கொடுக்கக்கூடிய ஒன்றாகும் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

ஈராக்கில் அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் வரிசையாக எறிபடைகளைப் பாய்ச்சிய போதிலும் அமெரிக்க வீரர்கள் எவருக்கும் அதில் உயிருடற்சேதம் ஏற்படவில்லை. இதனால் அமெரிக்க மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அமைதியை விழையும் எந்த நாட்டுடனும் சமாதானமாக போகவே அமெரிக்கா விரும்புகிறது என்று டிரம்ப் குறிப்பிட்டார். அவ்வேளையில், டிரம்புடன் துணையதிபர் மைக் பென்ஸ், தற்காப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் மற்றும் உயர் ராணுவத் தலைவர்களும் உடனிருந்தனர்.

ஈரானிய அதிரடிப் படையின் தலைவர் மேஜர்-ஜெனரல் காசிம் சுலைமானி கடந்த வெள்ளிக்கிழமை ஈராக்கில் அமெரிக்கப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார். அதற்குப் பதிலடி கொடுப்பதற்காக ஈராக்கில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளங்கள் மீது உந்துசக்தி கொண்ட இருபத்திரண்டு எறிபடைகளை ஈரான் ஏவியது.

ஈரான் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளும் சாத்தியத்தை டிரம்ப் நிராகரித்திருந்தாலும் அந்நாட்டைத் தண்டிக்கும் வகையில் மேலும் கடுமையான தடைகள் விதிக்கப்படும் என்று தெரிவித்தார். ஈரான் தனது போக்கை மாற்றிக் கொள்ளும் வரையில் அதன் மீதான கடுமையான தடைகள் தொடரும் என்று அவர் சூளுரைத்தார்.

அமெரிக்க ராணுவ வீரர்களைக் கொல்லும் நோக்கத்தில் எறிபடைத் தாக்குதல் நடத்தப்படவில்லை என்று ஈராக்கிய பிரதமர் அப்டேல்- மாஹ்தியுடம் ஈரான் விளக்கியுள்ளது.

ஆனால், அமெரிக்க வீரர்களைக் கொல்லும் நோக்கத்துடன்தான் அந்த எறிபடைகள் பாய்ச்சப்பட்டுள்ளன என்று அமெரிக்க உயர் ராணுவத் தலைவர் ஒருவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அமெரிக்க ராணுவ வாகனங்கள், போர்த் தளவாடங்கள் மற்றும் விமானங்கள் ஆகியவற்றை அழிப்பதற்கும் படை வீரர்களைக் கொல்வதற்கும்தான் அந்த எறிபடைகள் பாய்ச்சப்பட்டுள்ளன என்பதுதான் எனது கருத்தாகும் என்று அமெரிக்க முப்படை ஆணையத்தின் தலைவர் ஜெனரல் மார்க் மிலே குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here