துன் மகாதீர் கூறினார்
கோலாலம்பூர் –
பிரதமர் பதவியில் இருந்து எந்த நேரத்திலும் விலக நான் தயார் என்று துன் டாக்டர் மகாதீர் முகமது நேற்று தெரிவித்தார்.
எனினும் நம்பிக்கைக் கூட்டணியில் உள்ள அனைத்து உறுப்புக் கட்சிகளின் தலைவர்கள் இந்த விஷயம் குறித்து முடிவு செய்ய வேண்டும் என்றார் அவர்.
நான் பதவி விலக வேண்டுமா? அல்லது இல்லையா என்பதை நம்பிக்கைக் கூட்டணி உறுப்புக் கட்சிகள் முடிவு செய்யும் என்று கருதுகிறேன் என்றார் அவர்.
என்னைப் பொறுத்தவரையில் நம்பிக்கைக் கூட்டணி தேசியத் தலைவர் மன்றம் நான் இப்போது பதவி விலக வேண்டும் என விரும்பினால் இப்போதே நான் விலகி விடுவேன் என்று அவர் குறிப்பிட்டார்.
தலைநகரில் நேற்று நடைபெற்ற பேங்க் ராக்யாட் நன்னெறிக் கலந்துரையாடல் 2020இல் கலந்துகொண்ட பின் அவர் நிருபர்களிடம் பேசினார்.
கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் பதவியை ஒப்படைப்பதற்கான உறுதியான தேதியை அறிவிக்க வேண்டும் என்று கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கோரிக்கை விடுத்திருப்பது பற்றி நம்பிக்கைக் கூட்டணித் தலைவருமான துன் மகாதீர் இவ்வாறு கருத்துரைத்தார்.
மகாதீருக்கும் அன்வாருக்கும் இடையேயான பதவிப் பரிமாற்றம் இந்த ஆண்டு மே மாதம் நடைபெற வேண்டும் என்று பங்சாரில் நடைபெற்ற அதிகாரப் பரிமாற்றத்திற்கு நவம்பர் வரை மலேசியா காத்திருக்க வேண்டுமா எனும் தலைப்பிலான கலந்துரையாடலில் அந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கிடையே அமைச்சரவை மாற்றம் குறித்து அறிவிப்பீர்களா என டாக்டர் மகாதீரிடம் கேட்டபோது, இந்த விஷயம் எளிதான காரியமல்ல என்றார்.
அமைச்சரவையில் மாற்றம் செய்வது எளிதல்ல. ஏனெனில் இதை நான் மட்டுமல்ல, நம்பிக்கைக் கூட்டணியில் உள்ள நான்கு கட்சிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.