கோலாலம்பூர்:
பினாங்கு, சிம்பாங் அம்பாட்டில் உள்ள வணிக வளாகப் பகுதி ஒன்றில், குற்றப் பின்னணி கொண்ட 38 வயது உள்ளூர் நபர் ஒருவர் முகமூடி அணிந்த மர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்டுப் பலத்த காயமடைந்தார்.
இன்று காலை சுமார் 10 மணியளவில், ஜாலான் பெர்நியாகான் செரி தம்புன் பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் வெளியே இச்சம்பவம் நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சியை முடித்துவிட்டு, அதே கட்டிடத்தில் உள்ள ஒரு கடையில் முட்டைகளை வாங்கிக்கொண்டு தனது காரில் ஏற முயன்றார். கருப்பு நிற ஜாக்கெட் மற்றும் முகமூடி அணிந்து வந்த நபர் ஒருவர், அவரை நோக்கிய பல முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
தாக்குதலிருந்து தப்பிக்கப் பாதிக்கப்பட்ட நபர் அருகில் இருந்த உணவகத்தை நோக்கி ஓடிய போதிலும், அவரைத் துரத்திச் சென்று அந்த மர்ம நபர் மீண்டும் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
குறைந்தது 5 முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில், ஒரு தோட்டா பாதிக்கப்பட்ட நபரின் வலது கையில் பாய்ந்தது. தாக்குதலை நடத்திய பிறகு, அந்த மர்ம நபர் உடனடியாக ஒரு காரில் ஏறிச் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினார்.
காயமடைந்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக செபெராங் ஜெயா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்று, தெற்கு செபெராங் பிறை (SPS) மாவட்டப் போலீஸ் தலைவர் சுப்ரண்டண்ட் ஜெய் ஜானுவரி சியோவ் கூறினார்.
தற்போது போலிஸ் தடயவியல் பிரிவினர் சம்பவ இடத்தில் தீவிரச் சோதனைகளை மேற்கொண்டு வருவதுடன், தப்பியோடிய சந்தேக நபரை பிடிக்கத் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.




















