கோலாலம்பூர் –
அதிகாரப் பரிமாற்றம் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது எந்தச் சதித்திட்டத்திலும் ஈடுபடவில்லை என்று கெஅடிலான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.
அடுத்த பொதுத்தேர்தல் வரை மகாதீர் பதவியில் நீடிக்க வேண்டும். அது உறுதிசெய்வதற்காகச் சத்தியப்பிரமாண வாக்குமூலப் பிரகடனத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்பிகள் கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாயின.
அம்னோ, பாஸ், பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா ஆகிய கட்சிகளுடன் கெஅடிலான் கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியின் ஆதரவாளர்களும் இதில் கையெழுத்திடும்படி கேட்டுக் கொண்டிருப்பதாக அந்தச் செய்திகள் தெரிவித்தன.
இது குறித்து பிரதமர் மகாதீரைச் சந்தித்து விளக்கம் கேட்டேன். தமக்கும் இந்தத் திட்டத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று பிரதமர் என்னிடம் திட்டவட்டமாகக் கூறினார் என்றார் அன்வார்.
இவ்வாண்டு பிற்பகுதியில் கோலாலம்பூரில் ஆசிய பொருளாதார மண்டல நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டிற்குப் பின்னர் பதவி விலகுவதாக மகாதீர் மீண்டும் உறுதிமொழி அளித்திருக்கிறார் என்றும் அன்வார் கூறினார்.