கொரோனா வைரஸ், தற்போது 123 நாடுகளுக்குப் பரவி மக்களை மிரட்டிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த வைரஸ் உருவானதாகக் கூறப்படும் சீனாவில், வைரஸின் தாக்கம் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு, வைரஸால் பாதிக்கப்பட்ட 80,000 – க்கும் அதிகமான மக்களில் 70% பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக, உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.
கொரோனா சீனாவில் பரவத்தொடங்கிய வைரஸுக்கு , அங்கு மட்டும் இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது முதல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்தது. இந்த கடுமையான சூழ்நிலையில், சீனா முழுவதும் உள்ள மருத்துவர்கள், தங்கள் வீடுகள் மற்றும் உறவினர்களைப் பார்க்காமல், இரவு பகல் பார்க்காமல் நோயாளிகளைக் காக்கப் போராடினர். இந்தப் போராட்டத்தில், சில மருத்துவர்களும் ஊழியர்களும் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.
இந்த மோசமான சூழலிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சீனா மீண்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக, சீனாவில் கொரொனா வைரஸுக்காக தற்காலிகமாக உருவாக்கப்பட்ட மருத்துவமனைகளை மூட, அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வுஹான் நகரில் இருக்கும் 16 மருத்துவமனைகளை மூடும் வேலைகளில் மருத்துவப் பணியாளர்கள் ஈ
டுபட்டு வருகின்றனர். அங்கு, புதிதாக பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கமாகக் குறைந்ததை அடுத்தும் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்ததாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.