சுமங்கலிப் பெண்கள் தங்கள் கழுத்தில் மங்கல நாண் நிலைக்கவும்,தங்களது கணவன் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் சாவித்திரி அம்மனை வேண்டி இந்த விரதம் இருப்பது மரபு.
கணவருடன் இல்வாழ்க்கை சிறக்க சுமங்கலிகள் செய்ய வேண்டிய விரத பூஜை
பூஜை
கயிலாயத்தில்,ஒரு சமயம் ஈசனின் கண்களை விளையாட்டாகப் பார்வதி தேவியார் பொத்தியதால், உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது.அந்த கணம் உலகில் வாழும் ஜீவன்கள் மிகவும் துன்பத்திற்கு ஆளானதால், கோபம் கொண்ட இறைவன், பார்வதியை பூலோகம் சென்று தவம் செய்யும்படி கட்டளையிட்டார். பூலோகம் வந்த பார்வதி, காஞ்சி மாநகருக்கு வந்து கம்பா நதிக்கரையில் அமர்ந்து மண்ணால் சிவலிங்கம் நிறுவி விரதம் மேற்கொண்டு பூஜித்துக் கொண்டிருந்தாள்.
தேவியை சோதிக்க விரும்பிய ஈசன், கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுக்க செய்தார். வெள்ளம் பார்வதி தேவி பூஜை செய்யும் லிங்கத்தையும் அடித்துச் செல்ல வந்தது. உடனே தேவி சிவலிங்கத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டு இறைவனை வேண்டினாள். இறைவனும் நேரில் காட்சி கொடுக்க, இறைவனுடன் பார்வதியும் இணைந்தாள்.
அன்னை காமாட்சியே இந்த விரதத்தினை மேற்கொண்டதால் காரடையான் நோன்பு காமாட்சி அம்மன் விரதம் என்று பெயர் பெற்றது. மஹா பதிவிரதையான சாவித்திரி செந்நெல்லையும் காராமணியையும் கொண்டு அடை தயார் செய்து, வெண்ணெய்யுடன் ஸ்ரீகாமாட்சிஅன்னைக்குச் சமர்ப்பித்து வழிபட்டதால், தன் கணவனை எமதர்ம ராஜனிடமிருந்து மீட்டாள். நோன்பு அன்று காரடை தயார் செய்து, “உருகாத வெண்ணெயும் ஓரடையும் வைத்து நோன்பு நோற்றேன். ஒரு நாளும் என் கணவர் பிரியாமலிருக்க வேண்டும்” என்று சுமங்கலிகள் பூஜையின் போது வேண்டிக் கொள்ள வேண்டும் என்பது ஐதீகம்.