சவப்பெட்டியில் இருந்து உயிருடன் எழுந்த பெண்

வாழ்க்கை எப்போதுமே நம்முடைய கட்டுப்பாட்டில் இருப்பதில்லை.  குறிப்பாக நமக்கு மிகவும் பிடித்த ஒருவர் மரணிக்கும் போது அதனால் ஏற்படும் துயரம் வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

ஆனால் அவ்வாறு மரணித்த ஒருவர் மீண்டும் உயிர்த்தெழும் பட்சத்தில் நம்முடைய உணர்வுகள் அந்த நேரத்தில் எப்படி இருக்கும் என்பதை அனுபவித்து பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் ஜூன் 29 ஆம் தேதி தாய்லாந்தில் நடந்துள்ளது.

தாய்லாந்தின் உடான் தனியைச் சேர்ந்த சடார்ன் ஶ்ரீபொண்லா என்னும் பெயருடைய 49 வயது பெண்மணி ஒருவர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு செல்லும் வழியில் மரணம் அடைந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

கிடைத்த அறிக்கைகளின் படி வீட்டுக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரின் மூச்சு நின்று போய் இறந்து விட்டதாக தெரியவந்தது. இப்பெண்மணியின் தாயாரான மாலி என்பவர் தன்னுடைய மகளின் உயிரிழந்த செய்தியை உறவினர்கள் அனைவருக்கும் கூறியுள்ளார்.

ஏற்கனவே கல்லீரல் புற்று நோய்க்காக சிகிச்சை எடுத்து வந்த தன்னுடைய மகள் உயிரிழந்து விட்டதாக அனைவருக்கும் செய்தி அனுப்பியுள்ளார்.

உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் என்னுடைய மகளின் கடைசி நேரத்தை குடும்பத்தோடு செலவழிக்க விரும்புகிறோம் என்று கூறிய மாலி தன்னுடைய மகளை வீட்டிற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். ஆனால் “துரதிஷ்டவசமாக வீட்டிற்கு கொண்டு செல்லும் வழியிலேயே எனது மகள் உயிரிழந்து விட்டாள்” என அவரின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

புத்த மத வழக்கப்படி அவரது குடும்பத்தார் ஒரு சவப்பெட்டியில் அவரது உடலை வைத்து, இறுதி சடங்கிற்காக கோவிலுக்கு எடுத்து சென்றுள்ளனர். வீட்டிற்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததால் அவர்கள் சென்ற வேனை வீட்டிற்கு கொண்டு செல்லாமல் நேரடியாக இறந்த சடலங்களை வைத்து பூஜை செய்யும் பாடுங் பட்டானா கோவிலுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

அந்த இடத்தில் தான் சடலத்தை இரவு முழுவதும் வைத்து இறுதி சடங்குகளை செய்வார்களாம். கோவிலுக்கு செல்லும் வழியில் தான் அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்தருந்துள்ளது. சவப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ள அந்த இறந்த பெண்மணி திடீரென தனது கண்களைத் திறந்துள்ளார்.

அதிர்ச்சியில் அலறிய அவரது உறவினர்கள் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு சற்று ஆசுவாசமடைந்துள்ளனர். தனது மகளின் இந்த அதிசயத்தக்க உயிர் பிழைத்த நிகழ்வை அவரது தாய் மாலி அனைவரிடமும் மகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here