ஈக்வடார் நாட்டில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் நடு ரோட்டில் எரிக்கும் அவலம்

குழந்தைகளுக்கு நடுவே கணவரின் சடலம்.. கதறிய மனைவி
ஈக்வடார் நாட்டில் நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்!

குயாகுவில்,ஏப்ரல் 4-

கொரோனா வைரஸ் பாதித்து இறந்த கணவரின் சடலம் சிறிய வீட்டின் நடுவே கிடத்தி வைக்கப்பட்டுள்ளது.அந்த சடலத்தின் அருகே குழந்தைகள் சோகத்துடன் அமர்ந்துள்ளனர். அந்த குழந்தைகளின் தாய், தன் கணவரின் உடலை எடுத்துச் செல்ல வருமாறு அதிகாரிகளிடம் கதறுகிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களை அதிர வைத்துள்ளது. கொரோனா வைரஸ்க்கு 3,163 பேர் பாதிப்பு, 120 பேர் பலி என கூறும் ஈக்வடார் நாட்டின் உண்மை நிலை தான் இது. கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி உள்ளது. 54,000 பேருக்கும் மேல் இறந்துள்ளனர். ஆனால், தங்கள் நாடுகளில் சொல்லப்படும் பலி எண்ணிக்கை மிக மிக குறைவு என அந்தந்த நாடுகளில் களத்தில் இருப்போர் கூறி வருகின்றனர்.

உண்மை நிலை வேறு

ஆனால், பல நாடுகளில் உண்மை நிலை வேறாக இருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் வெளிவரும் பலி எண்ணிக்கை தகவலை விட சில மடங்கு அதிகமாகவே இறப்பு நிகழ்ந்துள்ளது என கூறப்படுகிறது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் தென் அமெரிக்க நாடான ஈக்வடாரிலும் வெளியே சொல்லப்பட்ட பலி எண்ணிக்கையை விட அதிகம் பேர் இறந்துள்ளனர்.

ஈக்வடார் சொல்லும் எண்ணிக்கை

தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் 3,163 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாகவும், 120 பேர் பலியாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், சமூக வலைதளங்களில் வெளியாகும் காட்சிகளை பார்த்தால் 120 பேர் மட்டுமே பலியாகி இருக்கின்றனர் என்பதை நம்ப முடியவில்லை.

குவியும் சடலங்கள்

மருத்துவமனைகளிலும், வீதிகளிலும் சடலங்கள் வரிசை கட்டி கிடத்தப்பட்டுள்ளன. மருத்துவமனையா, சவக் கிடங்கா? என கேட்கும் அளவிற்கு இத்தாலியின் அதே நிலையில் காட்சி அளிக்கிறது ஈக்வடார். இந்த நாட்டில் 120 பேர் தான் பலியா?

கதறிய கேப்ரியல்லா

ஈக்வடார் நாட்டின் பெரிய நகரமான குவாகுவிலில் தான் பலி எண்ணிக்கை அதிகம். அந்த நகரத்தை சேர்த்த கேப்ரியல்லா ஒரிலானா என்ற பெண் கதறலுடன் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தை அதிர வைத்துள்ளது. ஈக்வடார் நாட்டில் நிலவி வரும் தீவிர நிலையை அது உணர்த்துவதாக உள்ளது.

கண்ணீர் கோரிக்கை

அந்த வீடியோவில் அவர் தன் கணவரின் சடலத்தை எடுத்துச் செல்லுமாறு அதிகாரிகளிடம் கண்ணீருடன் முறையிடுகிறார். அவர்கள் தன்னை காத்திருக்குமாறு கூறியதாகவும், எல்லாமே நிலைகுலைந்து இருப்பதாக அதிகாரிகள் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன் கணவர் உடலை மரியாதையுடன் அடக்கம் செய்ய உதவுமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த வீடியோவில் அந்த சடலத்தை சுற்றி அவரது குழந்தைகள் அமர்ந்து இருப்பது மேலும் அதிர்ச்சி அளிக்கிறது.

வீதிகளில் எரிக்கும் கொடுமை

அந்த நாட்டில் பலர் வீட்டில் சடலத்தை வைத்துக் கொண்டு இருக்க முடியாமல், வீதிகளில் சடலங்களை கிடத்தி, அங்கேயே அமர்ந்து உள்ளனர். இவை கொரோனா வைரஸின் தீவிரத்தை மேலும் அதிகப்படுத்தவே செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது. சில இடங்களில் வீதியிலேயே சடலத்தை எரிக்கும் அவலமும் நடந்து வருகிறது.

150 சடலங்கள்

காவல்துறை அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் சில நாட்கள் முன்பு வரை ஒவ்வொரு நாளும் 30 சடலங்களை வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தி உள்ளனர். ஆனால், சமீப நாட்களில் நாள் ஒன்றுக்கு 150 சடலங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்த தகவலை நாட்டின் அதிபர் லெனின் மொரினோவே கூறி உள்ளார்.

அந்த நகரத்தில் மட்டும் 3500

நாட்டின் பெரிய நகரமான குவாகுவிலில் மட்டும் 2,500 முதல் 3,500 பேர் வரை இறக்கலாம் என எதிர்ப்பார்ப்பதாக அதிபர் லெனின் கூறி உள்ளார். இது மட்டுமின்றி, ஈக்வடாரில் கொரோனா வைரஸ் பாதித்தோரை சோதனை செய்ய அதிக அளவு மருத்துவ உபகரணங்கள் இல்லை என கூறப்படுகிறது.

காதால் கேட்பது பொய்

ஆயிரத்திற்கும் மேல் பலி எண்ணிக்கை உயர்ந்து விட்டது. யாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறது என்றே தெரியவில்லை. கொரோனா வைரஸால் இறந்தவர்களின் சடலங்கள் வீதிகளில் நிரம்பி இருக்க, அந்த நாட்டில் 120 பேர் தான் இறந்துள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தன் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு அறிக்கையில் குறிப்பிட்டு வருகிறது. கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் என்பதை இந்த நிலை உணர்த்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here