கொரோனா படுத்தும் பாடு: கொட்டும் மழையிலும் சோதனை

கோலாலம்பூர் –

கொரோனா தொற்றுநோய்க் கிருமி 17 பேருக்கு பரவியுள்ளதால் மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள மெனாரா சிட்டி ஒன் பிளாஸா ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மெனாரா சிட்டி ஒன் பிளாஸா ஆடம்பரக் குடியிருப்பில் 17 பேருக்கு தொற்றுநோய் பரவியுள்ளதைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் இப்போது போலீசாரும் ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தொற்றுநோய் கண்டிருக்கும் 17 பேரும் மலேசியாவைச் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் வேளையில் இங்குள்ள குடியிருப்பாளர்களிடமும் தீவிர மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனிடையே, மெனாரா சிட்டி ஒன் பிளாஸாவில் கோவிட் -19 தொற்றுநோய்க் கிருமி பரவியதைத் தொடர்ந்து மஸ்ஜிட் இந்தியா வளாகமே அபாயப் பகுதியாக உள்ளது. மஸ்ஜிட் இந்தியாவில் பாரம்பரியமிக்க கட்டடமாக மலாயன் மேன்சன் விளங்குகிறது.

இந்தக் கட்டடக் குடியிருப்பில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கியுள்ளனர்.
மஸ்ஜிட் இந்தியாவில் வியாபாரம் செய்யும் வணிகர்களும் அவர்களின் தொழிலாளர்களும் இங்கு அதிகளவில் தங்கியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் மருத்துவர்களும் அதிகாரிகளும் நேற்று மலாயன் மேன்சன் குடியிருப்பை முற்றுகையிட்டனர்.
இந்தக் குடியிருப்பில் உள்ளவர்களிடம் வீடு வீடாகச் சென்று மருத்துவர்கள் தொற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறிய தீவிர சோதனை நடத்தினர்.

பகல் 12.30 மணிக்குத் தொடங்கிய மருத்துவப் பரிசோதனை பிற்பகல் 3.00 மணிக்கு முடிவுக்கு வந்தது. அப்போது கடுமையான மழையையும் பொருட்படுத்தாது மருத்துவர்களும் தாதியர்களும் தங்களது பணியைச் செய்து முடித்தனர்.

தொற்றுநோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளும்படி குடியிருப்பாளர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டது.

கைகளைச் சுத்தமாகக் கழுவுங்கள், கிருமிநாசினி மருந்தை பயன்படுத்துங்கள். குடியிருக்கும் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று குடியிருப்பாளர்களுக்கு ஆலோசனைகளும் கூறப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here