கர்ணக் கவசம் தயாரிப்பார்களா?

கோலாலம்பூர் . ஏப்ரல் 8-

நம்மால் முடியாதா என்று இனி இருக்க முடியாது என்பதற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது. சில பொருட்களை ஏற்றுமதி செய்தே ஆகவேண்டும் என்றிருக்கிறது. சில பொருட்களை இறக்குமதி செய்தே ஆக வேண்டும் என்ற் கட்டாயம் இருக்கிறது.

தேவை அறிந்து இறக்குமதி செய்யவேண்டிய பொருட்கள் எதுவெனத் தெரிந்து இறக்குமதி செய்வதும் வணிகக் கலையில் சிறந்த கலை என்பதை மறுப்பதற்கில்லை.
இன்றைய அவசியத் தேவைகளில் ஒன்றாக இருந்துவருகிறது முகக்கவசம்.

இது இல்லாமல் வெளியில் செல்வது என்பது உகந்த செயலாக இருக்கவே முடியாது.
கோரோனாவின் கோரத்தாண்டவம் தொடங்குமுன் வீரவசனம் பேசியவர்கள் எல்லாம் முகக்கவசம் போட்டே ஆகவேண்டும் என்றாகிவிட்டது. இதற்கு என்ன காரணம்?

முகக்கவசம் அணியாமல் வெளியே செல்ல முடியாது. பொருட்கள் வாங்கச் செல்லமுடியாது என்றெல்லாம் ஆகிவிட்டதுதான் காரணம். சட்டத்திற்குப் பயந்துதான் முகக்கவசம் அணிந்தார்களே தவிர , பாதுகாப்புக்கு அல்ல.

முகக்கவசம் இல்லையா ? அப்படியானால் பேரங்காடியில் நுழையாதே என்ற கட்டாயம் உருவான காலத்திற்கு முன்பே, பல தனியார் பார்மஸிகள் முகக்கவச விற்பனைச் சுரண்டலில் வில்லன்களாகவே இருந்திருக்கின்றனர்.

அவற்றின் அவசியம் அப்போது அதிகமாகவே இருந்ததும் ஒருகாரணம். மக்கள், அச்சத்தின் உச்சிக்குச் செல்லும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அதன் விலையை குதிரையாக்கி கொம்பு சீவியவர்கள் பார்மஸி மன்னர்கள்.

பதுக்குவது எப்படி என்றும் பல மருந்தகங்கள் பாடம் எடுத்துக்கொண்டன. கெட்டிக்காரன் புளுகு எட்டும் நாள்வரை என்பார்களே என் 95 வகை மட்டும் அனைவரின் கவனத்தில் மனப்பாடமாய் இருக்கிறது.

அதன் விலை குதிரை விலையாக இருந்தது. அதன் ஒரு பெட்டி 230 வெள்ளிக்கும் கூடுதலாக இருந்த கதையும் உண்டு. கூடுதல் விலைக்கு விற்றதால் கம்பிக்குப் பின்னால் நின்றவர்களும் உண்டு.

ஆசை சிலரை அயோக்கியத்தனம் செய்யவும் தூண்டிவிடுகிறது. இதற்கும் அப்பால் நாடோடிகளும் தெருத்தெருவாக முகக்கவசம் விற்கத் துணிந்திருக்கிறார்கள் என்றால் முகக்கவசத்தின் பரிதாபத்தை என்னவென்று கூறுவது?

பயன்படுத்தப்படும் முகக்கவசம் பாதுகாப்பானதா? அப்படியெல்லாம் சிந்திக்க மறந்துபோயிற்று. அதன் நிலைமை வெகு கேவலமாயிற்று என்றுதான் கூறவேண்டியிருக்கிறது.

இனி, முகவசம் மலேசியத் தயாரிப்பாக மாறினால் தவிர அதன் தரம் உயரப்போவதில்லை. சிரிம் என்ற மலேசிய தர முத்திரையுடன் முகக்கவசத்தை தயாரிக்க வேண்டும். இவை மருத்துவத்திற்கென்றும் பொது பயன்பாட்டிற்கென்றும் தரம் பெற்றிருக்கவேண்டும்.

முடிந்தால் கர்ணக் கவசமாக இருந்தாலும் அதுபற்றியும் யோசிக்கலாமே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here