உத்தரவை மீறினால் வெ. 1,000 அபராதம்!

போலிஸ் எச்சரிக்கை

கோலாலம்பூர் –

பொதுமக்கள் நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கும் உத்தரவை மீறும் குற்றவாளிகளுக்கு 1,000 வெள்ளி அபராதம் விதிக்கும் நடவடிக்கை நேற்று முதல் தொடங்கியது என்று உள்நாட்டுப் பாதுகாப்பு பொது ஒழுங்குத்துறை இயக்குநர் டத்தோஸ்ரீ அஸிரில் சனி அப்துல்லா சனி நேற்று தெரிவித்தார்.

இந்த அபராதத் தொகையைச் செலுத்துவதற்கு குற்றவாளிகளுக்கு 2 வாரம் கால அவகாசம் வழங்கப்படும். அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

இந்த உத்தரவை மீறும் குற்றவாளிகளுக்கு அபராதத்தை விதிப்பது தொடர்பில் நிரந்தர நடவடிக்கை நடைமுறைகளை நாங்கள் பெற்று விட்டோம் என்று அவர் சொன்னார்.
பொதுமக்கள் நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கும் உத்தரவை மீறியதாக கண்டுபிடிக்கப்படுவோருக்கு எதிராக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அபராதத் தொகை 1,000 வெள்ளி என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மற்ற போக்குவரத்துக் குற்றங்களைப்போல அபராதத் தொகையைக் குறைக்க மேல் முறையீடும் செய்ய முடியாது என்று அவர் சொன்னார்.

ஆயிரம் வெள்ளி அபராதம் செலுத்தாத குற்றவாளிகள் நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ள மனு செய்யலாம் என்று அவர் புக்கிட் அமானில் நிருபர்களிடம் கூறினார்.

நடமாட்டத்திற்கான கட்டுப்பாடு மீதான ஆணையை மீறுவோருக்கு சாலைத்தடுப்புச் சோதனை மேற்கொள்ளும் இடத்தில் அபராதம் வசூலிக்கப்படாது. மாறாக அவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கோ மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கோ கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கான அபராத நோட்டீஸ் வழங்கப்படும் என்று அவர் விவரித்தார்.

அவர்கள் அந்த அபராதத் தொகையை சுகாதார அமைச்சின் அலுவலகத்தில் செலுத்த வேண்டும். இதே குற்றத்தை அவர்கள் மறுபடியும் செய்தால் அதே 1,000 வெள்ளி அபராதம்தான் விதிக்கப்படும். இதனை சாதாரண விஷயமாகக் கருதிவிட வேண்டாம்.

ஏனெனில் அபராதத் தொகையாக 1,000 வெள்ளி சம்பந்தப்பட்டிருக்கிறது என்று அவர் நினைவுறுத்தினார். முதல் கட்டமாக வழங்கப்படும் தேசியப் பரிவுமிக்க உதவித் தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணத்தை அபராதமாகச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் நினைவுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here