கொரோனா தரும் மன அழுத்தத்தில் இருந்து மீள்வது எப்படி?

மன அழுத்தத்தில் இருந்து மீள்வது எப்படி?

கொரோனா தொற்று தடுப்பு எவ்வளவு முக்கியமானதோ அதேபோன்று தொற்று தாக்கிய காலங்களில் மனநலம் பேணுவதும் மிக முக்கியமானதாகும். ஏனெனில் நோய் தொற்று தாக்குதலில் இருந்து விடுபடுவதற்கு தனிமைப்படுத்துதல் அவசியமாகி விடுகிறது.

அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பிறரிடம் தொடர்பு இல்லாமல் இருப்பதால் மனசோர்வு நோய்க்கு ஆளாக வாய்ப்பு உள்ளது. எதிர்கொள்ள இருக்கும் நிச்சயமற்ற காலத்தை நினைக்கும்போது மனஅழுத்தம் ஏற்படும். வீட்டில் அவர்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் தீர்ந்துவிடும் நிலையில் உதவி செய்ய ஆள் இல்லாதபோது மனம் பதற்றமடையும்.

கை கழுவுதல், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு செயல் ஆகியவற்றை சரிவர செய்தோமா? முக கவசம் சரியாக அணிந்தோமா? போன்ற சந்தேகங்கள் வருவதால் திரும்ப, திரும்ப அந்த வேலைகளை செய்ய முற்படுவதுண்டு. தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் பிற உறவினர்களை சந்திக்க இயலாதபோது, அவர்களுடைய ஆலோசனைகளை பெற இயலாததால் மனகுழப்பத்திற்கு ஆளாக நேரிடும். இது தீவிரமடையும் போது தற்கொலை எண்ணங்கள் மேலோங்கும்.

இயல்பாக தும்மலோ, இருமலோ, மூக்கில் பசபசப்போ வெளிப்பட்டால் இது கொரோனாவின் அறிகுறி என்று அச்சப்படும் நிலை ஏற்படும். விடுமுறை காலங்களில் இணையதள பயன்பாட்டையே நம்பி இருப்பதால் அதிலிருந்து விடுபட முடியாமலும், அதற்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையும் ஏற்படும். பேரிடர் நீங்கி, சமூக அமைதி திரும்பிய பின்னரும், பேரிடர் காலத்தில் கடந்து வந்த எதிர்மறை சம்பவங்களின் பிரதிபலிப்பாக மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சினைகள் உருவாகும்.

அரசு சொல்கிற தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மன அமைதியுடன் இருப்பதற்கு கொரோனா பற்றிய செய்திகளை அறிய நம்பகமான வழிகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும். அந்த செய்திகளை குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே கேட்டு அறிந்து கொள்ளவேண்டும். குழந்தைகளுடன் உள் விளையாட்டுகள், பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடுங்கள். குடும்பத்தோடு செலவிட உகந்த காலமாக இந்த நாட்களை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

பண்பாடு சார்ந்த புத்தகங்கள், நீதி நெறி, நாளிதழ் மற்றும் உங்களை கவர்ந்த புத்தகங்களை வாசிக்கலாம். அவற்றை வாசித்ததை குடும்பத்தினருடன் பகிர்ந்து விவாதிக்க வேண்டும். உங்கள் குழந்தை பருவ அனுபவங்களை வீட்டில் உள்ள உங்களது பிள்ளைகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். உடற்பயிற்சி, யோகா ஆகியவற்றை தினமும் செய்யவேண்டும்.

தியானம், வழிபாடு, கூட்டுப்பிரார்த்தனை செய்து குடும்பத்தினருடன் இணைந்து இருக்கவேண்டும். குடும்பத்தோடு செலவிடக்கூடிய காலத்தை பொன்னான காலம் என்று கருதுங்கள். மன உளைச்சல் மிகுந்த காலங்களில் இதுவும் கடந்து போகும் என்ற எண்ணத்தை மேலோங்க செய்ய வேண்டும். மெல்லிய இசை, ஊக்கம் தரும் பாடல்கள், நல்ல புத்தகங்கள் ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

யோகா நித்ரா போன்ற தளர்வு பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். இந்த காலத்தில் மன வலிமை மிகவும் தேவை. மேலும் சீரிய சிந்தனை திறன், பிரச்சினைகளை சமாளிக்கும் திறன் போன்றவைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும். எந்த செயலை செய்ய முற்படும்போதும் என்னால் முடியும் என்ற உணர்வோடு செய்ய தொடங்கவேண்டும். இவ்வாறு செய்வதனால் கொரோனா தரும் மனஅழுத்தத்தில் இருந்து மீளலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here