காஜாங்:
ஜாலான் சுங்கை சுவா, கம்போங் சுங்கை சுவாவில் இன்று காலை திடீரென தீப்பிடித்து எரிந்த ஒரு கடை வீட்டில் சிக்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேந்த நால்வரை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் தமது விரைவான நடவடிக்கையால் பாதுகாப்பாக மீட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பில், அதிகாலை 3.28 மணிக்கு அழைப்பு வந்தது என்று, சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை துணை இயக்குநர் (செயல்பாடுகள்) அமாட் முக்லிஸ் முக்தார் கூறினார்.
உடனே காஜாங், பாங்கி, பண்டார் துன் ஹுசைன் ஓன் ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டனர் என்று அவர் சொன்னார்.
“அவர்கள் அங்கு வரும்போது, இரண்டு மாடி கடை வீடு, 75 விழுக்காடு தீப்பிடித்து எரிந்திருப்பது கண்டறியப்பட்டது. அதேநேரம் அதற்கு அருகிலுள்ள ஏனைய மூன்று கடைகளும் தீப்பிடித்திருந்தன.
27 முதல் 58 வயதுக்குட்பட்ட இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் அந்தக் கடைவீட்டின் கீழ் தளத்தில் சிக்கிக்கொண்டனர், ”என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் போல்ட் கட்டர்களை பயன்படுத்தி கதவை திறந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
“பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிப்பதில் சிரமத்தை அனுபவித்ததாகவும், முதலுதவியின் பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்,” என்றும் அவர் மேலும் கூறினார்.









