சிலாங்கூர் மேன்ஷன் மலேயன் மேன்ஷன் ம லேசியாவின் முன்னோடி வீடமைப்புத் திட்டம்

கோலாலம்பூர், ஏப்.16-

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக முழு நடமாட்டக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கிறது சிலாங்கூர் மேன்ஷன்-மலாயன் மேன்ஷன் இரட்டை எட்டு மாடிக் கட்டங்கள்.

தலைநகரின் முன்னோடிக் குடியிருப்புத் திட்டத்தின் அடிப்படயில் உருவாக்கப்பட்ட முதல் பகுதி என்ற நீண்ட நெடிய வரலாற்றை இந்த இரட்டைக் கட்டடங்கள் தாங்கி வருகின்றன.

1921ஆம் ஆண்டு கோலாலம்பூரின் மக்கட் தொகை 80,424 என்று இருந்தது.

1931ஆம் ஆண்டு தற்போதைய அமெரிக்க கொரொனா வைரஸ் இறப்பு எண்ணிக்கையைப் போல கோலாலலம்பூரின் மக்கட் தொகை 111,418 என்ற அளவுக்கு உயர்ந்து போனது.

புதிய குடியிருப்புகளின் தேவை அவசியம் என உணர்ந்த அரசாங்கம் 1962ஆம் ஆண்டு இந்த இரண்டு எட்டு மாடிக் கட்டட குடியிருப்பை ஏற்படுத்தியது.

கீழே வரிசையாகக் கடைகள், மேலே 160 வீடுகள் என இரண்டு மேன்ஷன்களும் உருவாக்கப்பட்டன.

இதே காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட பெக்கெலிலிங் குடியிருப்பு சில ஆண்டுகளுக்கு முன்னர் பழமை மற்றும் கட்டட ஸ்திரத்தன்மை பல்வீனம் காரணமாக தகர்க்கப்பட்டபோதும் இந்த இரண்டு மேன்ஷன்களும் வரலாற்றை விஞ்சி நிலைத்தன.

பத்து ரோட் என்று அழைக்கப்பட்ட சாலை ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான் என பெயர் மாற்றம் கண்ட பிறகு மஸ்ஜிட் இந்தியாவும் வளர்ச்சி காணத் தொடங்கியது.

இன்று நாடு முழுவதும் உள்ள அனைத்து சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு முன்னோடிகளும் இங்கிருந்துதான் தொடங்கின.

தமிழ்த் திரைப்படப் பாடல்கள் வேண்டுமா? கொலம்பியா என்றும் ஜனனி(ஜனனி இப்போது கிடையாது) என்றும் இசைப்பதிவு நிலையங்கள் இங்கு இயங்கி வருகின்றன.

கால் நூற்றாண்டு காலமாக கொலம்பியா இசை நிலையம் இங்கு தொடர்ந்து இயங்கி வருகிறது.

1973ஆம் ஆண்டு கே.எப்.சி துரித உணவகம் இப்பகுதியில் திறக்கப்பட்டது.

1983ஆம் ஆண்டு மைடின் பேரங்காடி திறக்கப்பட்டது.

1800ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்தும் கேரளாவிலிருந்தும் மிக அதிகமான வியாபாரிகள் இங்கு வந்து தங்கத் தொடங்கினர்.

வந்தவர்கள் இந்திய முஸ்லீம் வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

1863ஆம் ஆண்டு இவர்கள் தங்களுக்காக பள்ளிவாசல் ஒன்றை உருவாக்கினர். கிள்ளான், கோம்பாக் ஆறுகள் இணையும் பகுதியில் உருவாகி இன்று மிக அழகாக மிளிர்ந்து கொண்டிருக்கும் இந்த பள்ளிவாசலை முன்னிறுத்தியே “மஸ்ஜிட் இந்தியா” என்ற பெயர் வழக்கில் வந்தது.

இத்தகைய நீண்ட நெடிய வரலாறு கொண்ட மஸ்ஜிட் இந்தியா முழு மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டுக்கு வந்து விட்டது.

ஏப்ரல் 7ஆம் தேதி சிலாங்கூர், மலேயன் மேன்ஷன் குடியிருப்பில் 15 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

ஒரு நேரத்தில் மலேசிய இந்திய முஸ்லீம் சகோதரர்களே முழுக்க முழுக்க வசிக்கும் பகுதியாக இருந்த இப்பகுதி தற்போது 97 விழுக்காடு அந்நியத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதியாக மாறி விட்டதால் கொரோனா பாதிப்பில் அந்நியர்களே அதிக பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here