செய்தியாளர்களும் முதல்நிலை பணியாளர்களே!

பட்டர்வொர்த் –

நாடும் மக்களும் கோவிட் – 19 தாக்கத்தினால் பல சிரமங்களை எதிர்நோக்கி இருக்கின்றனர். இந்நேரத்தில் மக்களுக்கு இரவு, பகல் பாராது மருத்துவர்கள், தாதியர்கள், போலீசார், ராணுவத்தினர், சுகாதார அதிகாரிகளும் பணியாற்றிக் கொண்டிருப்பது பாராட்டுக்குரியது.

இன்று நாட்டில் நடந்தது; நடந்து கொண்டிருப்பது பற்றிய தகவல்களை மக்களுக்குத் துல்லியமாகத் தெரிவிப்பதற்கு வெயில், மழை, இரவு – பகல் பாராது சுழன்று பணியாற்றும் பத்திரிகையாளர்களும் தகவல் ஊடகவியலாளர்களும் முன்னிலைப் பணியாளர்களே.

அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை மத்திய அரசாங்கம் வழங்க வேண்டும் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி. இராமசாமி நேற்று வலியுறுத்தினார்.

இவ்விவகாரத்தில் நாட்டின் முன்னணி நாளேடான மக்கள் ஓசை எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சியை அவர் வெகுவாகப் பாராட்டினார்.

கோவிட் – 19 கொடூரம் தொடர்பான அரசாங்கத்தின் செய்திகளை உண்மையாகவும் நம்பத்தகுந்த வகையிலும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் அரும்பணியை அவர்கள் ஆற்றி வருகின்றனர்.

பத்திரிகைகளும் தகவல் ஊடகங்களும் இல்லாவிடில் தகவல் அறியாது, நடப்பது என்னவென்று தெரியாது மக்கள் இருளில் தத்தளித்துக் கொண்டிருப்பர் என்று பேராசிரியர் இராமசாமி சுட்டிக்காட்டினார்.

மேலும் இதன் தாக்கம் கொடூரமானது; உயிரைக் காவு வாங்கக்கூடியது என்பது தெரிந்திருந்தும் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் தகவல் தரும் மிகப்பெரிய பொறுப்பை இவர்கள் சுமந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த இக்கட்டான வேளையில் விடுமுறையின்றி இவர்கள் எடுத்தக் காரியத்தைச் செவ்வெனச் செய்து வருவது பாராட்டுக்குரியது என்று அவர் வர்ணித்தார்.
ஒவ்வொரு நாளும் பல்வேறு சிரமங்களையும் தடங்கல்களையும் கடந்துதான் இவர்கள் இப்பணியைச் செய்கின்றனர்.

இச்செய்திகளை மிக நேர்த்தியாகத் தொகுத்து பத்திரிகைகளில் அச்சு ஏற்றும் பெரும் பொறுப்பில் இருக்கும் ஆசிரியர்களும் துணை ஆசிரியர்களும் துறை சார்ந்த அனைத்துப் பணியாளர்களும் மதிப்புக்கும் பாராட்டுக்கும் உரியவர்களாவர்.

அதே நேரத்தில் இவர்களுக்குப் பக்கபலமாக இருந்து எல்லாவிதமான பாதுகாப்பையும் வழங்கி வரும் நிர்வாகங்களையும் பாராட்டத்தான் வேண்டும் என்று பேராசிரியர் இராமசாமி குறிப்பிட்டார்.

கிருமித்தொற்று தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் செய்தியாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அரசாங்கம் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகிறேன்.

தங்களின் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் செய்தியாளர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் செய்திகளைச் சேகரித்துக் கொண்டிருக்கின்றனர்.
முதல்நிலைப் பணியாளர்கள் என்ற பட்டியலில் செய்தியாளர்களும் ஊடவியலாளர்களும் இடம்பெற வேண்டும் என்று அவர் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

அபாய பகுதிகள் என்று வர்ணிக்கப்படும் இடங்களுக்குச் சென்று இவர்கள் செய்தி சேகரித்து என்ன நடக்கிறது என்பதை மக்களுக்குப் படம்பிடித்துக் காட்டுகின்றனர் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here