நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை எம்சிஓ அமல்படுத்தப்பட்ட பிறகு நாட்டின் வருவாயில் தினமும் 2.4 பில்லியன் (240 கோடி) வெள்ளி வரை நஷ்டம் ஏற்படுவதாகப் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கருத்துரைத்தார்.
கோவிட்-19 வைரஸ் தொற்றினை எதிர்கொள்ள கடந்த மார்ச் 18ஆம் தேதி முதல் நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல தொழில்துறைகளும் வியாபாரங்களும் இயங்காமல் உள்ளன.
இந்த முடக்கத்தால் நாட்டின் வருமானத்தில் 2.4 பில்லியன் வெள்ளி வரை நஷ்டம் ஏற்படுகிறது என நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை 4ஆம் கட்டத்தை எட்டியுள்ள வேளையில் அதன் தாக்கத்தை என்னால் உணர முடிகின்றது. மேலும் இந்த வருவாய் பாதிப்பனை எதிர்கொள்ள உடனடியாக மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாவிட்டால் நாம் 60 வருடங்களுக்கு மேலாக மேம்படுத்தியுள்ள நாட்டின் பொருளாதாரம் வீணாகும் என நிதியமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ சப்ருல் தெங்கு அப்துல் அஸிஸ் என்னிடம் தெரிவித்துள்ளார்.
எனவே இதனை முன்வைத்து நாம் இதுவரை முன்னெடுக்காத மிகத் தைரியமான நடவடிக்கையைத் தற்போது மேற்கொண்டுள்ளோம் என்றார் அவர். இதனிடையே, நாட்டின் நிதியமைச்சர் பதவிக்குப் புதியவராவர். அவர் அமைச்சரவையில் இணைந்தபோது பொருளாதார மீட்சி ஊக்குவிப்புத் திட்டத்தின் வடிவமைப்பு மற்றும் அதற்காகத் தயார் செய்ய வேண்டிய நிதி ஆகியவை குறித்து திட்டத்தை இரண்டு வாரங்களுக்குள் துரிதப்படுத்த நான் கேட்டுக்கொண்டேன்.
அதன் அடிப்படையில் மக்கள் பரிவு பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் உருவானது. முதல் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நேரத்தில் இந்தத் திட்டத்திற்கு 250 பில்லியன் (25,000 கோடி) வெள்ளியும் இரண்டாம் கட்ட கட்டுப்பாட்டு ஆணை நேரத்தில் இத்திட்டத்திற்கு 10 பில்லியன் (1000 கோடி) வெள்ளியும் அறிவிக்கப்பட்டது.
நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்பில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக இந்த ஊக்குவிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பாக நீண்ட கால அவகாசம் எடுத்துக் கொள்ளாமல் மூன்றில் இருந்து 6 மாதங்கள் வரைக்கும் இந்தத் திட்டம் நிவாரணமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதிலும் நேரடி உதவித் திட்டங்களுக்கு 35 பில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் வரி மற்றும் இதர அம்சங்களுக்கு பல பில்லியன் வெள்ளி தயார்செய்ய வேண்டியிருந்தது.
வியாபாரம், தொழில்துறை சார்ந்தவர்களுக்கு உதவி செய்வதற்கு அந்த உதவித்திட்டம் உள்ளது. குறிப்பாக அவர்கள் குறிப்பட்ட நெடுங்காலத்திற்குத் தாக்குப்படிக்க இந்த உதவித்திட்டம் துணையாக இருக்கும் எனவும் பிரதமர் குறிப்பட்டார்.
இருந்தாலும் இந்தப் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டம் நாட்டின் பொருளாதாரத்தை வழக்க நிலைக்கு கொண்டுவரும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. ஆயினும் வருங்காலத்திற்கு கூடுதல் உதவிகள் தேவைப்படுவது குறித்தும் அரசாங்கம் தொடர்ந்து ஆய்வுசெய்யும்.
எனவேதான் இந்த கோவிட்-19 வைரஸ் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையில் அரசாங்கம் உள்ளது. அதே சமயத்தில் நாட்டின் பொருளாதாரத்தையும் நிலைநிறுத்த வேண்டும் என்ற பொறுப்பையும் அரசாங்கம் கொண்டுள்ளது என்றும் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கூறினார்.