ஜார்ஜ்டவுன் –
பினாங்கு மாநில 1.8 மில்லியன் பொது மக்களின் நல்வாழ்வுக்காகவும் சுகாதார வாழ்வுக்காகவும் நேற்று தொடங்கி பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் திறக்காததற்காக வழக்குத் தொடர தயாராக இருப்பதாக பினாங்கு மாநில முதல்வர் சௌ கொன் இயோ சூளுரைத்தார்.
மே திங்கள் 4ஆம் நாள் முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்த மறுக்கும் மாநில அரசிற்கு பாதிக்கப்பட்ட துறைகள் வழக்கு தொடரலாம் என மூத்த அமைச்சரும் அனைத்துலக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சருமான டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி விடுத்த அறிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக பினாங்கு முதல்வர் சௌ பதிலடி கொடுத்தார்.
அதே வேளையில் இரண்டு நாட்களுக்கு முன்னதாக நிபந்தனை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பினாங்கில் வருகின்ற மே மாதம் 8ஆம் தேதி முதல் கட்டங்கட்டமாக அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டதை சௌ தெளிவுபடுத்தினார்.
அஸ்மின் பொருளாதார மேம்பாடு குறித்து எதனை எதிர்பார்க்கிறார் என கேட்க விரும்புகிறேன். ஏனெனில், இந்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமலாக்கம் குறித்து அனைத்து மாநில அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்காமல் கூடிய விரைவில் அனுமதி பெற விரும்புகிறார்.
பினாங்கின் 1.8 மில்லியன் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்காக வழக்குத் தொடர மாநில அரசு தயாராக உள்ளது. அதே வேளையில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் பொருளாதாரத் துறையைத் தொடங்கவும் மாநில அரசு தயாராக உள்ளது என்று அவர் வலியுறுத்தினார்.
மூத்த அமைச்சர் பினாங்கு மாநிலத்தை அச்சுறுத்த வேண்டிய அவசியமில்லை மாறாக பினாங்கை அனைத்துலக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் பிரதான பங்குதாரராக கருதி மதிப்பளித்து நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சி திட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்று முதல்வர் விவரித்தார்.
எனவே, பி.கே.பி-யின் தளர்வு மக்களின் நெரிசல் காரணமாக கட்டம் கட்டமாகத்தான் செயல்படுத்த முடியும். இரண்டாவது, அனைத்து துறைகளும் அறிவிக்கப்பட்ட எஸ்.ஒ.பி தயார்படுத்துவதற்கு கால அவகாசம் தேவை. மேலும், கடந்த மே மாதம் 1-ஆம் தேதி வெளியிட்ட எஸ்.ஒ.பி-யில் சில மாறுதல்கள் அறிவிக்கப்பட்டன.
எடுத்துக்காட்டாக, கட்டுமானத் துறையில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கோவிட்-19 சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று மே மாதம் 4-ஆம் நாள் அன்று கூட்டரசு அரசாங்கம் அறிவித்தது என்று அவர் கூறினார்.