கொரோனாவால் பரவும் காசநோய்: அடுத்த 5 ஆண்டுகளில் 14 லட்சம் மக்கள் உயிரிழப்பார்கள்

கொரோனா வைரஸ் மனித சமுதாயத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்ததுடன் 150-க்கும் மேற்பட்ட நாடுகளின் பொருளாதாரத்தையும் அப்படியே புரட்டி போட்டுவிட்டது.

கொரோனா பரவலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பெரும்பாலான நாட்டு மக்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

இது, காச நோயாளிகள் அதிகம் வாழும் கென்யா, இந்தியா, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதாக ‘ஸ்டாப் டி.பி’ என்னும் உலகளாவிய அமைப்பு கூறுகிறது.

வேலை காரணமாக வீட்டிலிருந்து வழக்கமாக வெளியே சென்று வரும் நபர்கள் 24 மணி நேரமும் வீட்டிலேயே இருப்பதால், அதே வீட்டில் வசிக்கும் காசநோயாளிகளால் இந்த நோய்த் தொற்றின் பாதிப்புக்கு உள்ளாக நேரிடுகிறது. இதனால் காசநோய் பரவும் அபாயமும் அதிகம் உள்ளது என்று விளக்குகிறது, இந்த அமைப்பு.

இதனால் அடுத்த 5 ஆண்டுகளில் உலக அளவில் காசநோய்க்கு வழக்கத்தை கூடுதலாக 14 லட்சம் மக்கள் உயிரிழப்பார்கள் எனவும் ஸ்டாப் டி.பி. அமைப்பு மதிப்பிட்டு உள்ளது.

இது தொடர்பாக, லண்டன் இம்பீரியல் கல்லூரியின் தொற்றுநோய்த் துறையின் இணை பேராசிரியர் நிமலன் கூறுகையில், “காசநோய் விஷயத்தில் கொரோனா ஊரடங்கிற்கு முந்தைய நிலை ஏற்பட நீண்ட காலம் பிடிக்கும். ஏனென்றால் ஊரடங்கு காலத்தில் காச நோயாளிக்கு உரிய மருத்துவமோ, சேவையோ கிடைத்து இருக்காது. எனவே இதன் தாக்கம் பல ஆண்டுகள் நீடிக்கலாம்” என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here