கனடாவில் வீட்டின் மீது விமானம் விழுந்து பெண் விமானி மரணம்

கனடாவில் கொரோனா போராளிகளை கவுரவிக்கும் சாகசத்தின் போது வீட்டின் மீது விமானம் விழுந்து தீப்பிடித்ததில் பெண் விமானி  ஜெனிபர் கேசி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒட்டாவா: சீனாவில் தோன்றிய உயிர்கொல்லி கொரோனா வைரஸ் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உயிர் பலிகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசுக்கு பயந்து உலகம் முழுவதும் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கும் வேளையில் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள், போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் சேவை மானப்பான்மையுடன் மக்களுக்காக களப்பணியாற்றி வருகின்றனர்.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்நின்று போராடி வரும் அவர்களை உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முறைகளில் கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கனடாவில் கொரோனா போராளிகளை கவுரவிக்கும் விதமாக அந்த நாட்டு விமானப்படை விமானங்கள் நேற்று முன்தினம் வான் சாகசத்தில் ஈடுபட்டன. நாடு முழுவதும் பல்வேறு மாகாணங்களில் விமானப்படை விமானங்கள் வானில் பறந்து சாகசங்களை நிகழ்த்தின. அந்த வகையில் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணம் கம்லூப்ஸ் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து 2 விமானப்படை விமானங்கள் சாகச நிகழ்ச்சிக்காக புறப்பட்டு சென்றன. 2 விமானங்களிலும் தலா 3 விமானிகள் இருந்தனர்.

புறப்பட்ட சில நொடிகளில் ஒரு விமானத்தில் திடீரென தீப்பிடித்தது. இதனை அறிந்த விமானிகள் உடனடியாக விமானத்தை தரையிறக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் விமான நிலையத்தையொட்டி இருக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது விழுந்தது. இதனால் அந்த வீட்டில் இருந்த 2 பேர் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்தனர். இதற்கிடையில் விமானத்தில் பற்றி எரிந்த தீ வீட்டிலும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதில் வானுயரத்துக்கு கரும் புகை மண்டலம் உருவானது. வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் போராடி தீயை அணைத்தனர்.

முன்னதாக விமானம் வீட்டின் மீது விழுவதற்கு சில வினாடிகளுக்கு முன்னர் ஒரு விமானி மட்டும் பாராசூட் மூலம் வெளியே குதித்து உயிர் தப்பினார். மற்ற 2 விமானிகளும் விபத்தில் சிக்கினர். இதில் ஒரு விமானி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் பலத்த காயம் அடைந்தார். இதற்கிடையில் விமான விபத்தில் பலியானது ஜெனிபர் கேசி என்ற பெண் விமானி என்பது தெரியவந்துள்ளது. இவரது இறப்புக்கு ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ள கனடா விமானப்படை காயமடைந்த மற்றொரு விமானி விரைவில் குணமடைய வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here