செர்டாங் இந்து ஆலயத்தில் நடத்தப்பட்ட திருமண வைபவத்தில் ஏற்பாட்டாளர்கள், கலந்துக் கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்காப்பு துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்தார்.
நிபந்தைகளுக்கு உட்பட நடமாட்டக் கட்டுப்பாட்டின் விதிகளை மீறிய செயலாக இது கருதப்படுகிறது. ஜூன் 10 தொடங்கி பச்சை மண்டலத்தில் உள்ள 84 இந்து ஆலயங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் கூட்டம் கூடும் வைபவங்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்பட வில்லை. எனவே இவ்விவகாரம் தொடர்பில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவ்வாலயத்தில் திருமண வைபவத்தில் கிட்டத்தட்ட 100 பேர் கலந்து கொண்டுள்ளனர். முக்கியமான வழிப்பாடுகளுக்கு மட்டுமே மக்கள் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுவர் என்று முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசாங்கம் வெளியிட்ட அனைத்து நிபந்தனைகளும் இந்த வைபவத்தில் மீறப்பட்டுள்ளன.
இவ்விவகாரம் தொடர்பில் மக்கள் மத்தியில் உள்ள அமைதியை சீர்குழைக்கும் வகையிலான கருத்துகளை யாரும் பகிர வேண்டாம் என்றும் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சபரி கேட்டுக் கொண்டார்.