‘ஓப் சோஹோர்’ – போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக இருந்த ராணுவ அதிகாரி கைது

கோலாலம்பூர்,

நாட்டில் மேற்கொள்ளப்பட்ட “ஓப் சோஹோர்” நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் ராணுவ அதிகாரி ஒருவரை, கடத்தல் தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) தெரிவித்துள்ளது.

அரச மலேசிய போலீஸின் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட சோதனையில், அதிக அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்த அதிர்ச்சி தகவல் வெளிப்பட்டது.

MACC தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி, “அந்த அதிகாரி, குற்றவாளிகளுக்கு முக்கியமான தகவல்களை கசியவிட்டதுடன், கடத்தல் நடவடிக்கைகளிலும் நேரடியாக ஈடுபட்டார் என நம்பப்படுகிறது,” என்று இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற 2025 MACC தலைமை ஆணையர்களின் வட்டமேசை மாநாட்டுக்குப் பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கிளாங் பள்ளத்தாக்கில் நடத்தப்பட்ட “ஓப் சோஹோர்” நடவடிக்கையில், 30 முதல் 55 வயதுக்குட்பட்ட மூன்று ராணுவ அதிகாரிகள், இரண்டு முன்னாள் மூத்த ராணுவ அதிகாரிகள், மற்றும் ஒரு இந்தோனேசிய குடிமகன் உட்பட மொத்தம் 10 நபர்கள் கைது செய்யப்பட்டதாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஒரு வருட கால விசாரணைக்கு பின் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், RM 63,000-க்கும் அதிகமான ரொக்கம், போதைப்பொருள் பொட்டலங்கள், எடை மற்றும் அளவிடும் உபகரணங்கள், மதுபானம், மற்றும் போலி ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதற்கிடையில், புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ ஹுசேன் ஓமார் கான், இச்சோதனையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்.

கைதானவர்களில், கும்பலின் மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் ஒரு ராணுவ அதிகாரி, ஒரு உள்ளூர் ஆண், மற்றும் இரண்டு வெளிநாட்டு பெண்கள் அடங்குவதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here