கோவிட் 19 உலகப் பொருளாதாரத்தை சிதைத்துள்ளது வாய்ப்புகளுக்கான திசையையும் திறந்து வைத்துள்ளது

கோவிட் 19 வைரஸ் தாக்குதல் பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலி கொண்டு, உலகின் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு இருக்கிறது. சுகாதாரப் பிரச்சினையாகக் கிளம்பி, பொருளாதாரப் பிரச்சினைகளை உருவாக்கிவிட்டிருக்கிறது. மலேசியாவைப் பொருத்த வரை, அரசியல் நெருக்கடி உச்சத்தில் இருந்த தருணத்தில், கோவிட் 19 வந்து தாக்கியது.

அரசியல் சவால்களைச் சந்திக்க வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலைமையை அரசாங்கம் மிக சாதுர்யமாகச் செயல்படுத்தி இந்தத் தொற்று நோயின் கடுமையைக் கையாள்வதில் வெற்றி கண்டுள்ளது.

இவ்வாண்டு மார்ச் 27ஆம் தேதி அரசாங்கம் அறிவித்த 25 கோடி ரிங்கிட் மில்லியன் பொருளாதார மீட்சித் திட்டம், மக்களின் பொருளாதாரச் சிக்கலை தீர்த்து விட்டது எனச் சொல்லிவிடமுடியாது. ஆனாலும் மக்களின் வாழ்க்கைப் பயணம் தொடர்ந்து செல்ல ஓரளவு உதவி இருக்கிறது.

கோவிட் 19 மக்களுக்கு மிகப் பெரிய பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தி இருக்கிறது என்பதனை மறுப்பதற்கில்லை. மே மாதத் தொடக்கத்தில் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி, 2020 ஆம் ஆண்டுக்கு தாங்கள் உத்தேசித்திருந்த 4.5 விழுக்காடு உலகப் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை மறு ஆய்வு செய்து, 0.1 விழுக்காடாக மட்டுமே இருக்கும் என மறு உத்தேச அறிவிப்பு செய்துள்ளது.

மலேசியாவின் பொருளாதர வளர்ச்சி 2 விழுக்காடாகக் குறையும் என மலேசிய மத்திய வங்கி அறிவித்துள்ளது. மலேசியப் பொருளாதார ஆய்வு மையம் 24 லட்சம் மில்லியன் தொழிலாளர்கள் வேலை இழக்கக்கூடும் என எச்சரித்துள்ளது.

கோவிட் 19 புரட்டிப் போட்டு இருக்கும் இந்த உலகம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புமா? எப்போது திரும்பும் என்பதுவே இன்றைய மில்லியன் டாலர் கேள்வி.

புதிய வாய்ப்புகள்

கோவிட்19 உலகளவில் மிகப் பெரிய பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது என்பது உண்மை. அதேவேளையில், இந்த ஆபத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் எடுத்த தற்காப்பு நடவடிக்கைகள் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்து இருக்கிறது. இணையம் வழி பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள், கொள்முதல் பயனீட்டாளர்கள், அதனைக் கொண்டுசேர்க்கும் பணியாளர்கள் எனப் புதிய தொழிற்துறை மிக வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

கோவிட் 19க்கு முன்னரும் இணையம் வழி பொருட்களை வாங்கும் வர்த்தகம் இருந்து வந்து இருக்கிறது. அதன் வளர்ச்சி திட்டமிட்டதைக் காட்டிலும் மிக வேகமாக வளர்ந்து இருக்கிறது. சீனா உட்பட பல மேற்கத்திய நாடுகள் தங்களது மருத்துவமனைகளில் அதிகமாக மனித ரோபோக்களைப் பயன் படுத்தத் தொடங்கி உள்ளன.
2021 ஆம் ஆண்டளவில், கிளவுட் தரவு மையங்கள் 94 விழுக்காடு பணிச்சுமைகளைச் செயலாக்கும் என்று சிஸ்கோ தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது. புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும். 2023ஆம் ஆண்டு உலக கணினி, தொழில்நுட்பம் தொடர்பான வர்த்தகம், 62,330 கோடியாக உயரும் என கணிக்கப்படுகிறது.

இந்தத் தொழில் நுட்ப மாற்றங்கள், தற்போது சுணக்க நிலையில் இருக்கும் உலகப் பொருளாதாரம் மீண்டு எழ உதவியாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக வகை செய்யும். அந்த வாய்ப்புகள் நாம் மீண்டும் எழ உதவும் என நம்பிக்கை கொள்வோம். மனிதர்களின் தேவையே கண்டு பிடிப்புகளுக்கான திறவுகோள். நம்பிக்கை கொள்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here