இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 270 லட்சம் டன்

சென்ற ஆண்டின் அக்டோபர் மாதத்தில் தொடங்கிய சந்தைப் பருவத்தில் இதுவரையிலான காலத்தில் இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி குறித்த விவரங்களை சர்க்கரைத் தொழில் துறாஇக் கூட்டமைப்பான இஸ்மா வெளியிட்டுள்ளது.

அதன்படி, அக்டோபர் 1 முதல் மே 31ஆம் தேதி வரையில் சர்க்கரை ஆலைகள் இணைந்து மொத்தம் 268.21 லட்சம் டன் அளவு சர்க்கரையை உற்பத்தி செய்துள்ளன. சென்ற ஆண்டின் இதே காலத்தில் சர்க்கரை உற்பத்தி அளாவு 327.53 லட்சம் டன்னாக இருந்தது. அதாவது இந்த ஆண்டில் 59.32 லட்சம் டன் குறைவான அளவில் சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டின் மே மாத நிலவரப்படி மொத்தம் 10 சர்க்கரை ஆலைகள் மட்டுமே கரும்பு நசுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், இந்த ஆண்டில் 18 ஆலைகள் சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இந்த ஆண்டில் மொத்தம் 265 லட்சம் டன் அளவு சர்க்கரை மட்டுமே உற்பத்தியாகும் என்று இஸ்மா மதிப்பிட்டிருந்த நிலையில், அதைவிடக் கூடுதலான அளவிலேயே சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் சில ஆலைகள் இழுத்து மூடப்பட்டதால் சர்க்கரை உற்பத்தியில் தொய்வு ஏற்பட்டது.

இந்த ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 125.46 லட்சம் டன் அளவு சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் உற்பத்தி அளவு 117.81 லட்சம் டன்னாக இருந்தது. மகாராஷ்டிராவில் சர்க்கரை உற்பத்தி அளவு 107.20 லட்சம் டன்னிலிருந்து 60.98 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது. ஏப்ரல் 30ஆம் தேதியிலேயே கர்நாடக மாநிலத்தில் கரும்பு நசுக்கும் பணி நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில் அங்கு மொத்தம் 33.82 லட்சம் டன் அளவு சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அங்கு சென்ற ஆண்டு உற்பத்தி 43.25 லட்சம் டன்னாக இருந்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், இந்த ஆண்டில் மொத்தம் 24 ஆலைகள் கரும்பு நசுக்கும் பணியைத் தொடங்கின. ஆனால் இப்போது நான்கு ஆலைகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டில் தமிழகத்தில் 5.78 லட்சம் டன் சர்க்கரை மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு உற்பத்தி அளவு 7.22 லட்சம் டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here