பொருளாதார மீட்சித் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

* வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்க்க வெ. 900 கோடி
* சம்பள உதவி நிதித் திட்டம் மேலும் 3 மாதம் நீட்டிப்பு
* முதலாளிகள் சம்பள உதவி நிதிக்கு மனு செய்யலாம்
* வேலையில்லாத மலேசியர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு உதவி நிதி
* மாதம் 30 வெள்ளியில் பயணக் கட்டுப்பாடு இல்லாத சலுகை அட்டை
* உள்நாட்டுத் தயாரிப்பு கார்களுக்கு 100% விற்பனை வரி விலக்கு

பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் நேற்று அறிவித்த குறுகிய கால பொருளாதார மீட்சித் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:-

* அரசாங்கத்தின் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்கள் 24 லட்சத்திற்கும் அதிகமான வேலைகளைக் காப்பாற்றி உள்ளது. சுமார் ஒரு கோடி மக்களின் ரொக்கப் பணப் புழக்கத்தின் சுமையைக் குறைத்துள்ளது. 300,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு இது துணை நின்றது.

* 150 கோடி வெள்ளி மதிப்பிலான வேலை வாய்ப்பு உதவி நிதித் திட்டம் கொண்டு வரப்பட்டது. வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் நிதி உதவியைப் பெற இத்திட்டம் வகை செய்கிறது. இதன் மூலம் 300,000 பேர் நன்மை அடைவார்கள்.

* நிறுவனங்களுக்கு 2 ஊக்குவிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. 40 வயதிற்கும் கீழ்ப்பட்ட வேலையில்லாத மலேசியர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள், ஒரு தொழிலாளிக்கு 800 வெள்ளி வீதம் உதவித் தொகை பெற முடியும். அதே சமயம் 40 வயதிற்கும் மேற்பட்டவர்களையோ அல்லது மாற்றுத் திறனாளிகளையோ வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் 1,000 வெள்ளி உதவி நிதியைப் பெற முடியும். 6 மாதங்களுக்கு இந்தச் சலுகை தொடரும்.

* நாட்டில் அதிகரிக்கும் வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்க்க சுமார் 900 கோடி (9 பில்லியன்) வெள்ளியை அரசு ஒதுக்கியது. இதன் மூலம் நாடு முழுமையும் 30 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பலன் அடைவர்.

* ஒரு தொழிலாளிக்கு 600 வெள்ளி வழங்கும் சம்பள உதவி நிதித் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

* நிபந்தனையுடன் கூடிய மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின்போது செயல்பட அனுமதிக்கப்படாத முதலாளிகள், சம்பள உதவி நிதித் திட்டத்திற்கு மனு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

* மக்களுக்கு வலுவூட்டவும் வர்த்தகத்திற்கு புத்துயிர் அளிக்கவும் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் தேசியப் பொருளாதார மறுமீட்சித் திட்டத்தை (பென்ஜானா) அரசு கொண்டு வந்துள்ளது.

* இந்தப் பொருளாதார மறு மீட்சித் திட்டத்தில் 3,500 கோடி (35 பில்லியன்) வெள்ளி மதிப்பிலான 40 வியூகங்கள் உள்ளன. இதில் 1,000 கோடி (10 பில்லியன்) வெள்ளி அரசாங்கத்தின் நேரடி நிதிப் பங்களிப்பாக உள்ளது.

* பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோருக்கு மை 30 எனப்படும் பயணக் கட்டுப்பாடு இல்லாத அட்டையை அரசு அறிமுகம் செய்கிறது. இந்தப் பயணச் சலுகைக்கு அவர்கள் இனி மாதம் 30 வெள்ளி செலுத்தினால் போதும். அனைத்து நாடுகளின் பிரஜைகளுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படுகிறது. ஜூன் 15 தொடங்கி 2020 இறுதி வரை இச்சலுகை நீடிக்கும்.

* உள்நாட்டில் தயாரிக்கப்படும் பயணிகள் கார்களுக்கு 100 விழுக்காடு விற்பனை வரியிலிருந்து விலக்களிக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 50 விழுக்காடு விற்பனை வரி விலக்களிக்கப்படுகிறது. ஜூன் 15 முதல் 31.12.2020 வரை இது தொடரும்.

* ஜூலை முதல் தேதி தொடங்கி 6 மாத காலத்திற்கு செம்பனை எண்ணெய் மூலப் பொருட்கள் சிலவற்றுக்கு 100% ஏற்றுமதி வரி விலக்களிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here